மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்வுகள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
கந்தசஷ்டி பெருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இவ்விழாவின் 6 -ஆம் திருநாளன்று முருகபெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததாக ஐதீகம். இந்த ஐதீகத் திருவிழா தமிழகம் முழுவதிலும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களிலும், முருகன் ஆலயங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது.
சூரசம்ஹாரம் நிகழ்வை முன்னிட்டு, முருகப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து யானை, சிங்கம், அசுரன் ஆகிய மூன்று முகங்களைக் கொண்ட சூரனை ஒவ்வொன்றாக தன் சக்திவேலைக் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். மேலும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா என பக்தி கோஷத்தோடு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கட்டளையில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் கலந்து கொண்ட தருமபுரம் ஆதீனகர்த்தர் பின்னர் மாயூரநாதர் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இதேபோல் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தருமபுரம் ஞானபுரீசுவரர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவையொட்டி பொறையார் குமரன் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் புகழ்பெற்ற குமரன் கோயில் உள்ளது. இவ்வாலயத்தில் கடந்த 25 -ஆம் தேதி கந்த சஷ்டி விழா சொற்பொழிவுடன் துவங்கி நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி முருக பெருமான் கோயில் வீதியில் எழுந்தருளினார். அங்கு சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமகாவும், தன முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை முருக பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி தன்னுடன் ஆட் கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட் கொண்டார். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் முருக பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து முருக பெருமான், வள்ளி - தெய்வானை திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற உள்ளது.