Soorasamharam Fasting: கந்தனுக்கு அரோகரா.. பக்தர்களே சூரசம்ஹாரத்தில் விரதம் இருப்பது எப்படி?
சூரசம்ஹாரம் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், முருகப்பெருமானுக்கு எப்படி விரதம் இருப்பதை கீழே காணலாம்.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்கள் பல உள்ளது. அவற்றில் மிக மிக முக்கியமானது சூரசம்ஹாரம் திருநிகழ்வு. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததை கொண்டாடும் இந்த திருநாளே சூரசம்ஹாரம் ஆகும்.
சூரசம்ஹாரம்:
ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு பிறகு அமாவாசைக்கு மறுநாள் வரும பிரதமை திதி தொடங்கி, சஷ்டி திதி வரை சூரசம்ஹாரம் 6 நாட்கள் நடக்கும். 7வது நாள் திருக்கல்யாண வைபவத்துடன் சூரசம்ஹாரம் நிறைவு பெறும். நடப்பாண்டில் சூரசம்ஹாரம் அக்டோபர் 27ம் தேதி நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, நாளை மறுநாள் சூரசம்ஹாரம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

சூரசம்ஹாரம் திருவிழா என்றாலே பக்தர்கள் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது முதலே விரதம் இருப்பது வழக்கம். பெரும்பாலான பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்குவது வழக்கம். உடல்நலக்குறைவு. வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் சில பக்தர்களால் விரதம் இருக்க இயலாது. அவ்வாறு விரதம் இருக்க இயலாதவர்கள் சூரசம்ஹார நன்னாளில் மட்டும் விரதம் இருப்பார்கள்.
அவ்வாறு சூரசம்ஹாரம் நன்னாளில் விரதம் இருப்பவரகள் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. முதல் நாளை வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள முருகர் உள்ளிட்ட சாமி படங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2. சூரசம்ஹார நாளான 27ம் தேதி காலையிலே எழுந்து குளித்துவிட வேண்டும்.
3. பின்னர், வீட்டில் உள்ள முருகப்பெருமான் படத்திற்கு முன்பு விளக்கேற்ற வேண்டும்.
4. விளக்கை ஏற்றி முருகப்பெருமானிடம் என்ன காரணத்திற்காக விரதம் இருக்கிறீர்களோ அதை முருகப்பெருமானிடம் கூறி மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
5. உங்கள் வேண்டுதலை மனதில் நினைத்துக்கொண்டு ஓம் முருகா என்று மனதார வேண்டி, உங்கள் வேண்டுதல் நிறைவேற்றித் தர வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
6. முருகப்பெருமானின் படத்திற்கு செவ்வரளி, முல்லை, செம்பருத்தி ஆகிய மலர்களில் ஏதாவது ஒரு மலர் சூட்ட வேண்டும்.
7. முருகப்பெருமானுக்கு பால், பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
8. முருகப்பெருமானைப் போற்றும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என ஏதாவது ஒன்றை பாராயணம் செய்வது நல்லது ஆகும். இவற்றை பாராயணம் செய்ய முடியாதவர்கள் ஓம் சரவண பவ மந்திரத்தை சொல்லலாம்.
9. மாலையில் சூரசம்ஹாரம் நடக்கும் என்பதால் பக்தர்கள் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம்.
10. சூரசம்ஹாரம் நடப்பதை கோயிலுக்குச் சென்று ரசிக்க முடியாத பக்தர்கள் தொலைக்காட்சியில் கண்டு களிக்கலாம்.
விரதம் இருந்த பிறகு சூரசம்ஹாரம் நிறைவிற்கு பிறகு குளித்துவிட்டு, முருகனுக்கு படைத்த பால் மற்றும் நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.




















