(Source: ECI/ABP News/ABP Majha)
திருமணத் தடை நீக்கும் திருப்புல்லாணி கோயில்! எங்கு இருக்கிறது? எப்படிச் செல்வது?
திருமணத் தடை மற்றும் பிள்ளைப் பேறு வரம் தரும் கோயிலாக ராமநாதபுரம் மாவட்டதத்தில் உள்ள திருப்புல்லாணி கோயில் திகழ்கிறது.
வைணவ தலங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஆலயம் திருப்புல்லாணி கோயில் ஆகும். ராமாயணத்திற்கும் இந்த கோயிலுக்கும் தொடர்புடையதாக இக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கேணிக்கரை செல்லும் வழியில் அமைந்துள்ளது திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாத பெருமாள் கோயில்.
திருமணத் தடை நீக்கும் திருப்புல்லாணி கோயில்:
மிகவும் பழமையான இந்த கோயிலில் மிகப்பெரிய சிறப்பம்சமாக இருப்பது இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் முன்பு பெருமாளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வதுடன் தல வரலாற்றை பக்தர்களுக்கு விளக்கி பூஜை செய்வது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் மற்றும் திருமணம் நடக்க வேண்டும் என்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நிச்சயம் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம் ஆகும். நீண்ட நாட்களாக திருமணத் தடை உள்ளவர்கள் இந்த கோயிலில் வேண்டிக் கொண்டால் பெருமாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்பட்டு அந்த குங்குமம் வழங்கப்படுகிறது. அந்த குங்குமத்தை தொடர்ந்து 48 நாட்கள் நெற்றியில் பூசி வந்தால் கண்டிப்பாக திருமண பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. தேவிீப்பட்டினத்தில் உள்ள நவபாஷன கோயிலுக்குச் சென்ற பிறகு பலரும் இங்கு வருவது வழக்கமாக உள்ளது.
குழந்தைப் பேறு:
அதேபோல, குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் இந்த பெருமாளை வேண்டிக் கொண்டு கோயிலில் வழங்கப்படும் பால் பாயாசத்தை வாங்கி பருகினால் விரைவில் குழந்தைப் பேறு கிட்டும் என்பதும் ஐதீகமாக உள்ளது. வழக்கமாகவே இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் காணப்படும் சூழலில், புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படும்.
இந்த கோயிலில் பெருமாள் சயன கோலத்திலும் காட்சி தருகிறார். இந்த கோயில் பெருமாள் சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய கோயில் என்பதால் இங்கு சீதையில்லாமல் ராமர் காட்சி தருகிறார். மேலும், புத்திர பாக்கியம் இல்லாத தசரதன் இந்த கோயிலில் யாகம் செய்து இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்து தனது மனைவிகளுக்கு இங்கு படைக்கப்பட்ட பால் பாயாசத்தை வழங்கி அவர்கள் பருகிய பிறகே ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகணன் பிறந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே, இந்த கோயிலில் பிள்ளைப் பேறு வேண்டுபவர்களுக்கு பால் பாயாசம் வழங்கப்படுகிறது. இக்கோயிலில் பல ஆண்டுகள் பழமையான அரச மரம் ஒன்று இந்த கோயிலின் தல விருட்சமாக உள்ளது.