சமூக சீர்திருத்தவாதியின் 200-வது பிறந்தநாள்: - அந்தக்காலத்தின் புரட்சியாளர் செய்தது என்ன?
சாமியார்களின் தவறுகளைத் தட்டிக்கேட்டதிலும் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதிலும் தீவிரமாக இருந்தார். இறைவன் ஒருவனே என்பதிலும் உறுதியாக இருந்தார் தயானந்த சஸ்வதி சுவாமிகள்.
200-வது பிறந்தநாளை கொண்டாடும் அரசு:
பள்ளிப்பருவத்தில், கிட்டத்தட்ட அனைவரும், முன்பெல்லாம் வரலாறு - புவியியல், தற்போது சமூக அறிவியல் புத்தகங்களில் படித்த ஒரு பெயர் சுவாமி தயானந்த சரஸ்வதி. ஆர்ய சமாஜம் எனும் சமூக அமைப்பைத் தோற்றுவித்தவர் என படித்திருப்போம். அவருக்கு, பிப்ரவரி 12-ம் தேதி பிறந்தநாள். அதுவும் 200-வது பிறந்தநாள். அவரது 200-வது பிறந்தநாளை, ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொடங்கி வைக்கும் பிரதமர்:
அதன்படி, மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாளில், ஓராண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லி நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைக்கிறார். விழாவில் சிறப்புரை ஆற்றி, அரசின் சார்பில், தயானந்த சரஸ்வதியின் கொண்டாட்டங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்குகிறார். அந்த வகையில், 200-வது பிறந்தநாளை கொண்டாடும் சுவாமி தயானந்த சரஸ்வதி செய்த, சிறந்த செயல்களை, இந்தக்கால தலைமுறைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த குறுந்தொகுப்பு.
யார் இந்த சுவாமி தயானந்த சரஸ்வதி?
தமிழகத்தின் காவிரி கரையில் பிறந்து இமயத்தில் கங்கை கரையில் அமர்ந்து, சின்மயா மிஷனைப் பிரபலப்படுத்திய சுவாமி தயானந்த சரஸ்வதி, கடந்த 2015-ம் ஆண்டுதான் மறைந்தார். ஆனால், தற்போது 200-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதும் இந்தக் கட்டுரை பேசுவதும் இவரைப் பற்றி அல்ல, குஜராத்தில் பிறந்த மகரிஷி தயானந்த சரஸ்வதியைப் பற்றிதான் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் மூல்சங்கர். அந்தக் கால மும்பை மாகாணத்தில், குஜராத்தும் இணைந்திருந்தது. அப்போது, டங்காரா என்ற இடத்தில், 1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பிறந்தார். அடிப்படைக் கல்வி, பன்மொழி புலமை பெற்றிருந்தவருக்கு, திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தபோது, 1846-ம் ஆண்டு தமது 22-வது வயதில் ஆன்மீகத்தைத் தேர்வு செய்து, வீட்டை விட்டு வெளியேறினார்.
சமூக செயற்பாட்டாளரான தயானந்த சரஸ்வதி:
இமயம் முதல் வட இந்தியாவின் பல்வேறு இடங்களைச்சுற்றி வந்த மூல்சங்கர், சுவாமி விர்ஜானந்தாவிடம் ஆசிப்பெற்று, சுவாமி தயானந்த சரஸ்வதியாக பெயர் மாற்றம் பெற்றார்.
குருவின் ஆசியுடன் ஆன்மீகத்தையும் கல்வியையும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர், இந்து சமயம் குறித்து பல்வேறு பரப்புரைகளை மேற்கொண்டார். வேதக்கல்வியை பரவலாக்க முயன்றார். அந்தக்காலக் கட்டத்தில், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாகக் கண்டித்தார். ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் என்றும் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இதற்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்தபோது, தமது பேச்சின் மூலம் அவர்களுக்குப் பதிலடி கொடுத்தார் தயானந்த சரஸ்வதி.
பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல்கொடுத்தார்:
பெண் கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்தான், தம்முடைய கருத்துகளை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வதற்காக, ஆர்ய சமாஜம் அமைப்பை 1875-ல் தொடங்கினார்.
இறைவன் ஒருவனே என்றும் சிலை வழிப்பாடு தேவையில்லை என்றும் உறுதியாக நம்பிய சுவாமி தயானந்த சரஸ்வதி, சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்புவதில் முனைப்புடன் இருந்தார். கோவில்களில் சாமியார்கள் செய்யும் தவறுகளைத்தட்டிக் கேட்டும் வழக்கத்தில் இருந்த பல்வேறு மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் குரல் கொடுத்தார்.
பெண்களுக்கு சம உரிமை, அனைவருக்கும் கல்வி, தீண்டாமை ஒழிப்பு, குழந்தை திருமணம் கூடாது போன்றவற்றில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். மூட நம்பிக்கைகளை ஒழிப்பதில் தமது ஆர்ய சமாஜம் அமைப்பின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டார். சாதி, மத வேறுபாடுகளைக் களைதல், சமூக சமத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அந்தக்காலத்தில் முதன்மை செயற்பாட்டாளராக சமூகத்தில் செயல்பட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதிலும் தீவிரமாக இருந்தார் என்றும் வரலாறுப் பதிவுகள் கூறுகின்றன. அப்போது, ஸ்வராஜ் எனும் சுயாச்சியை அதிகமாக முன்னெடுத்தார்.
வரலாற்றில் மறக்க முடியாத மகான்:
அந்தக்கால பம்பாயில் தொடங்கி, வட இந்தியாவின் பல பகுதிகளில் ஆர்ய சமாஜம் அமைப்பின் கிளைகளை அதிகப்படுத்தினார். பல நூல்களின் மூலம் தமது கருத்துகளைப் பதிவு செய்தார். இவருடைய செயல்களால், சுவாமி தயானந்த சரஸ்வதி என அழைக்கப்பட்டவரை, அவரது சீடர்கள், மகரிஷி தயானந்த சரஸ்வதி என அழைக்க ஆரம்பித்தனர். தமது 59-வது வயதில், 1883-ம் ஆண்டு காலமானார் தயானந்த சரஸ்வதி.
சமூக சீர்திருத்தங்கள், கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்த தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம் நாட்டின் சமூக, கலாச்சார விழிப்புணர்வில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 200-வது பிறந்தநாள் கொண்டாடும் ஆன்மீகவாதி, சமூக சீர்திருத்தவாதி, அந்தக்கால புரட்சியாளராக, சிந்தனையாளராகத் திகழ்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு, இந்திய வரலாற்றில் எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு.