தஞ்சை பெரிய கோயில் நவராத்திரி கலை விழாவில் வீணை இசை கச்சேரி - ரசித்து கேட்ட பக்தர்கள்
நவராத்திரி மற்றும் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 சதய விழாவையொட்டி வரும் 25ஆம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி மற்றும் ராஜ ராஜ சோழன் சதய விழாவையொட்டி வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வீணை இசையை ரசித்து கேட்டனர்.
நவராத்திரி பண்டிகையின் நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழாவானது நாளை 24-ம் தேதி வரை கொண்டாட்டப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலைவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலைவிழா கடந்த 15- தேதி தொடங்கிய நிலையில் நாளை 24-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பெரிய நாயகி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரம் நடந்தது.
கடந்த 19-ம் தேதி காலையில் பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மாலையில் பெரிய நாயகி அம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெரிய நாயகி அம்மனை தரிசித்தனர். மேலும் 20-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், 21-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 22-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும் இன்று மாலை 23-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 24-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படுகிறது.
மத்திய அரசு கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத் துறை அரண்மனை தேவஸ்தானம் ஆகியவை இணைந்து நவராத்திரி மற்றும் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 சதய விழாவையொட்டி வரும் 25ஆம் தேதி வரை கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
அந்தவகையில் திருவையாறு சுவாமிநாதன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. வீணைஇசையில் பக்திபாடல்கள் வாசிக்கப்பட்டன. கோயிலுக்கு வந்திருந்த வெளி மாநில, மாவட்ட மற்றும் வெளி நாட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து முடித்து மெய்மறந்து வீணை இசையை கண்டுகளித்தனர்.
இதேபோல் தஞ்சாவூர் அடுத்த கோவிலூர் நெல்லித்தோப்பில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது.
விழாவின் ஏழாம் நாளில் காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீ மூகாம்பிகா அலங்காரம் செய்யப்பட்டது. எட்டாம் நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் மாலையில் நவராத்திரி கலாபக் கலை விழா நடைபெற்றது. இதில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர். இதையடுத்து பரதநாட்டிய கலைஞர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் சுவாமிநாதன் கேடயம் பரிசு வழங்கி பாராட்டினார். இக்கோயிலுக்கும் வெளி மாநில, மாவட்ட மற்றும் வெளிநாட்டு பக்தர்க்ள வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.