காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
மும்பையில் 19 வயது நபர், காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது, 4 வயது குழந்தை மீது காரை ஏற்றியதில் அந்த குழந்தை துடிதுடித்து உயிரிழந்தது.
மும்பையில் 4 வயது குழந்தை மீது 19 வயது டீனேஜர் காரை ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திலேயே அந்த குழந்தை துடிதுடித்து இறந்துள்ளது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் சந்தீப் கோல் என்ற 19 வயது நபர், காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது, 4 வயது குழந்தை மீது காரை ஏற்றியுள்ளார். விபத்தில் சிக்கிய குழந்தை உயிரிழந்தது. வடலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது.
குழந்தை மீது காரை ஏற்றிய டீனேஜர்:
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "உயிரிழந்த குழந்தை ஆயுஷ் லட்சுமண் கின்வாடே என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பம் நடைபாதையில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை ஒரு தொழிலாளி.
வைல் பார்லே பகுதியில் வசித்து வரும் சந்தீப் கோல், ஹூண்டாய் க்ரெட்டா காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது" என தெரிவித்துள்ளது.
மும்பையில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், மாநகராட்சியால் இயக்கப்படும் மின்சாரப் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர்.
தொடரும் விபத்துகள்:
கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி குர்லாவில் நடந்த இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இது, சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.