மயிலாடுதுறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலம்
மயிலாடுதுறையில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா, பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் பாலாலயம் ஆகிய இரு ஆன்மிக நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை சின்னக்கடை வீதி வீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய விநாயகரை வழியென செல்வோரை விழியென காத்திடும் தெய்வமும், வேண்டிய மாத்திரத்தில் வேண்டியவனவற்றை சித்தியாக்கும் விநாயகராக அருள்பாலிக்கும் சித்தி விநாயகரை கச்சேரி பிள்ளையார் என அப்பகுதி பொதுமக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் இவ்வாலயம் 16 ஆண்டுகளுக்குப் பின்பு புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் அக்டோபர் 30-ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்துவரப்பட்டு, நான்கு காலையாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகாபூர்ணாகுதி பூஜை செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். பின்னர் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் முன்னிலையில் விமானத்தில் புனிதநீர் உற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் பெருமானுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு தரிசனம் செய்தனர்.
பரசலூர் வீரட்டேஸ்வரர் கோவில் பாலாலயம்.
அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருப்பறியலூர் என்று அழைக்கப்படும் பரசலூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அட்டவீரட்ட தலங்களில் 4-வது தலமான பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் செய்நன்றி மறந்த மாமன் முறை கொண்ட தட்சனை வீரபத்திரரை கொண்டு தட்சனின் தலையை கொய்து, சுவாமி வதம் செய்த தலமாகவும், பின்னர் தட்சனின் மனைவி வேதவல்லி வேண்டுதலை ஏற்று ஆட்டின் தலையை பொருத்தி, தட்சனை சிவபெருமான் உயிர்ப்பித்ததாகவும் இதனால் சுவாமிக்கு வீரட்டேஸ்வரர் என்ற பெயர் வழங்கப்பட்டதாக புராண வரலாறு கூறுகிறது. கோயிலின் வரலாறு குறித்து தக்க யாக பரணி என்ற நூலில் ஒட்டக்கூத்தர் விவரமாக குறிப்பிட்டுள்ளார்.
கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்பவர்களுக்கு விவாகத்தடை மற்றும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2011 -ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனை அடுத்து இன்று சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு பாலாலயம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து உளி கொண்டு, சுவற்றைப் பெயர்த்து திருப்பணியை தொடங்கி வைத்த தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருப்பணிக்கான சிறப்பு பூஜைகளை செய்து முகூர்த்த கால் நட்டு, மகா தீபாராதனை காட்டினார். பாலாலய சிறப்பு பூஜைகளை கோயில் அர்ச்சகர் சண்முகசுந்தர குருக்கள் தலைமையில் திருக்கடையூர் கணேஷ் குருக்கள் மற்றும் மகேஷ் குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள், ஆதீன கோயில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, திருக்கடையூர் கோயில் உள்துறை விருதகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.