பட்டினத்தார் குருபூஜை: வாழ்க்கையின் உண்மை உணர்த்திய சிவபெருமான்! திருவெண்காட்டில் நடைபெற்ற ஐதீக நிகழ்வு..!
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பட்டினத்தார் திருவிழாவின் ஐதீக நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பல்லவனத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சவுந்தரநாயகி சமேத பல்லவனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலத்தில் தீவிர சிவபக்தரும், புலவருமான பட்டினத்தார் அவதரித்த ஸ்தலமானதால் இங்கு பட்டினத்தாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
10 நாள் குருபூஜை விழா
இங்கு பட்டினத்தார் வரலாறு ஐதீக விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 10 நாள் குருபூஜை விழாவாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குருபூஜை விழா கடந்த ஜுலை 29 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஆகஸ்ட் 9 -ம் தேதி வரை நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெற்று வரும் இவ்விழாவை முன்னிட்டு திருவெண்காட்டில் ஞான கலாம்பிகையுடன் எழுந்தருளிய பட்டினத்தார். மணிகர்ணிகை ஆற்றில் நீராடி, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிவதீசை பெரும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மூன்றாம் திருநாள் நிகழ்வாக பட்டினத்தார் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள அக்னி, சூரியன், சந்திரன் ஆகிய முக்குலத்தில் நீராடும் நிகழ்வு நடந்தது.

அப்போது பட்டினத்தாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி சன்னதியில் பட்டினத்தார் மரகத மற்றும் ஸ்படிக லிங்கத்திற்கு சிவ பூஜை செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. பூஜையை கோயில் சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இதில் பட்டினத்தாரை குலதெய்வமாக வணங்கும் காரைக்குடி நகரத்தார் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பட்டினத்தார் வரலாறு
முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார். இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார்.

ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார். ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி! அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது.

மகனை சம்பாதிக்க அனுப்ப அவன், தவிட்டு எருவைக்கொண்டு வந்ததைக் கண்டவர் கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில், “”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. “”மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,” என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், இங்கு சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து, முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, சென்னை திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், “பட்டினத்தார்’ என்றழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார்.






















