பெருமாள் ஆலயத்தில் இருந்து சிவாயலத்திற்கு சீர்வரிசை எடுத்து வழிபாடு செய்த மயிலாடுதுறை பக்தர்கள்
மயிலாடுதுறை அருகே மறையூர் அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு திருவாதிரை விழாவையொட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்துச் சென்று வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மறையூர் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மாமுனிவர் அகஸ்தியர் வழிபட்ட இக்கோயில், சித்திரை மாதத்தில் சூரியனின் வெளிச்சம் நேராக கருவறைக்குள் செல்லும் சிறப்புடையதாகும். இக்கோயில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த காரணத்தால் கோயிலில் உள்ள நடராஜபெருமான் உற்சவமூர்த்திகள் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டது.
இதனை அடுத்து ஆண்டுதோறும் அகஸ்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருவாதிரை விழாவுக்காக கிராம மக்கள் வரதராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நடராஜபெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு, அங்கிருந்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்கல பொருள்களை சீர்வரிசையாக எடுத்து அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
அவகையில் இன்று நடைபெற்ற திருவாதிரை விழாவை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து செண்டை மேளங்கள் முழங்க பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து அகஸ்தீஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே அகஸ்தீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு விட்டதால் நடராஜர் சிலையை மீண்டும் அகஸ்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருள செய்ய கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குத்தாலம் அருகே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை திறந்து வைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடத்தை கல்லூரி நிர்வாகத்திடம் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒப்படைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாதிரிமங்கலம் கிராமத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் கட்டிடத்தை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார். இதன் அருகே தற்காலிகமாக குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. போதுமான வகுப்பறைகள் இல்லாமல், மாணவர்கள் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் தற்காலிக ஏற்பாடாக தற்போது 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட இரண்டு அறைகள் கொண்ட சமுதாய புதிய கட்டிடத்தை மாணவர்களின் நலன் கருதி கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
இக்கல்லூரி இங்கு இயங்கும் வரை தற்போது திறக்கப்பட்ட சமுதாயக் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். ஏற்கனவே பழைய சமுதாயக் கூடத்தில் தான் தற்காலிக கல்லூரி இயங்கி வரும் நிலையில் தற்போது புதிய சமுதாய கட்டிடத்தையும் கல்லூரிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவர்களின் நலன் கருதி கல்லூரிக்கு நிரந்தர இடம் தேர்வு செய்து கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இவ்விழாவில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கோட்டாச்சியர் யுரேகா, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.