மயூர நாட்டியஞ்சலியில் பார்வையாளர்களை கவர்ந்த வெளிநாட்டு நாட்டிய தாரகைகளின் நடனங்கள்
புகழ்வாய்ந்த மயூரநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியஞ்சலி இரண்டாம் நாள் நிகழ்வில் வெளிநாட்டு நாட்டியதாரகைகள் கலந்துகொண்டு பல்வேறு நாட்டியங்களை அரங்கேற்றம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான சிவனை அபயாம்பிகை அம்மன் மயிலுரு கொண்டு பூஜித்து சாப விமோசனம் அடைந்த புகழ்வாய்ந்த பழமையான மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயிலை சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் கடந்த 16 ஆண்டுகளாக மயூரநாதர் கோயில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகின்ற 18 -ஆம் தேதி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மயிலாடுதுறை சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை 17 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வானது தொடர்ந்து பிப்ரவரி 18 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.
இதில் முதல் நாள் நிகழ்வில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை, கோவை, சேலம், மயிலாடுதுறை, பெங்களூரு, வாலாஜா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மங்கள இசை உடன் துவங்கிய நிகழ்வில் கோவை ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் வழங்கிய வந்தே பாரதம் நிகழ்ச்சியில் பல மாநில நாட்டியக் கலைகளின் சங்கமமான கதக், ஒடிசி, மோகினியாட்டம், பரதநாட்டியம் குச்சுப்புடி உள்ளிட்ட ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது.
தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்வாக, மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, பெங்களூர் மற்றும் வெளிநாட்டவர்கள் பங்கேற்ற பல்வேறு நாட்டிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. இதில் குறிப்பாக சிங்கப்பூர், அபுதாபி, நியூ ஜெர்சி, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு நாட்டிய தாரகைகள் நிகழ்த்திய சிவனின் ருத்ரதாண்டவம், மற்றும் சிவனும் பார்வதியும் இணைந்து உலகில் உயிர்களை படைக்கும் ராகேஷ்வரி தரானா நாட்டியம், மற்றும் சென்னை ஸ்ரீ சாய் ந்ருத்யாலயா குழுவினரின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி நாட்டிய நாடகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நாட்டிய அஞ்சலி நிகழ்வை காண மயிலாடுதுறை மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.