Maha Shivaratri History : மகா சிவராத்திரியும் வரலாறும்: புராணங்கள் சொல்வதென்ன? தெரிஞ்சிக்கோங்க!
Maha Shivaratri History: மகா சிவராத்தி எப்படி உருவானது என்ற வரலாறு பற்றி புராணங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பற்றி இங்கே காணலாம்.
இந்தாண்டு புகழ்பெற்ற மகா சிவராத்திரி வரும் 18 ஆம் தேதி (சனிக்கிழமை, பிப்ரவரி, 18,2023) கொண்டாடப்பட உள்ளது.
சிவராத்திரி என்பது சிவன், சக்தியின் கூடலை கொண்டாடும் விழா என்று சொல்லப்படுகிறது. இந்துக்கள் மாதந்தோறும் சதுர்தசி திதி நாளில் கிருஷ்ண பக்ஷத்தில் இந்த சிவராத்திரியை கொண்டாடுகின்றனர். மாசி மாதத்தில் வரும் இதே திதி பிரசித்தி பெற்றது. மகா சிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள்.
இந்துக்களின் புராணங்களின்படி மகா சிவராத்திரி நாளில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றுகிறார். அது முதன்முதலில் ஒரு மகா சிவராத்திரி நாளில் தான் நிகழ்ந்தது. விஷ்ணுவும், பிரம்மனும் தான் அந்த சிவராத்திரி நாளில் லிங்க வடிவில் சிவனை முதன்முதலில் தரிசித்தனர் என்று சொல்லப்படுகிறது. மாத சிவராத்திரியன்று விரதம் மேற்கொள்ளும் நபர்களின் வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றுவார். இதன் வரலாற்று பின்னணி என்ன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
மகா சிவராத்திரி வரலாறாக புராணங்கள் சொல்வதென்ன?
ஆலகால விஷம்:
பொங்கிவந்த ஆலகால விஷத்தினால் மக்கள் யாரும் பாதிக்கக்கூடாது என்று எண்ணிய சிவபெருமான், பாற்கடலிலிருந்து பொங்கிய ஆலகால விஷத்தினைத் தனது கழுத்தில் தாங்கி நீலகண்டனாக நின்றது சிவராத்திரி நாளன்றுதான் என்று கூறப்படுகிறது.
பிரம்மன் - திருமால் சண்டை
உலகில் உயிரிகளின் படைப்புக்கான கடவுளாக சொல்லப்படுகிற பிரம்மன், வாழ்வினை காக்கும் கடவுளான திருமால் ஆகிய இருவருக்குள் யார் பெரியர் என்ற எண்ணம் எழுந்தது. இருவருக்கும் இடையே கருத்துமோதல் தொடங்கியது. தங்களுள் யார் பெரியவர் என்ற கேள்விக்கு விடைத் தேடி சிவபெருமானையே கேட்டுவிடலாம் என்று கையிலாயம் சென்றனர். எல்லாவற்றிற்கும் கதைகள் மூலம் பதில் சொல்லும் வழக்கம் கொண்டவர். இதை விளக்கிட சிவபெருமான் ஒரு திருவிளையாடல் செய்ய முடிவெடுத்தார்.
இருவரிடலும், சிவபெருமான் இப்படி ஒரு டாஸ்க் கொடுத்தார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவர் யாரோ அவரே, உங்களுள் பெரியவர் என்று கூறினார். வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார். திருமால் வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமிக்குக் கீழே சென்றார். திருமால் அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு பயணப்பட்டார். ஆனால், இருவருக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
எவ்வளவு முயற்சி செய்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு திருமால் திரும்பினார். உயர உயரப் பறக்க முயன்ற பிரம்மன் களைப்படைந்தார். வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். அதனிடம் உதவியைக் கோரினார். சிவபெருமானிடம் தலைமுடியை கண்டதாக கூறும்படி பிரம்மன் சொல்லியதைக் கேட்டு பேசியது சிவபெருமானுக்கு கோபத்தை உண்டாக்கியது. ஜோதி வடிவாய் இருந்த சிவன் அக்னிப் பிழம்பாக மாறினார். இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் மற்றும் தேவர்களும் சிவபெருமான் சாந்தியடைய வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தோன்றினார். இதுவும் சிவராத்திரி தினத்தில்தான்.
சிவன் - பார்வதி திருமணம்
சிவபெருமான் - பார்வதி இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டதும் மகா சிவராத்தி நாளன்று என்று கூறப்படுகிறது. சிவனின் கண்ணைப்பொத்திய செயலால் விளைந்த குழப்பத்தைப் போக்க, உமாதேவி விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாள் என்று கூறப்படுகிறது.
திரயோதசி, சதுர்த்தசி - இந்த திதிகளுமே விசேஷமானவை. திரயோதசி- பார்வதியின் வடிவம். சதுர்த்தசி, சிவபெருமானின் வடிவம் என்று சொல்கின்றன புராணங்கள்.
சிவராத்திரி
சிவன் என்றதும் லிங்கமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவலிங்கத்தின் புராணக்கதை மகா சிவராத்திரியுடன் தொடர்புடையது.இன்றைய நாளில்தான் சிவபெருமான் முதன்முறையாக லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்தினார் என்று நம்பப்படுகிறது. அப்போதிருந்து, இந்த நாள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
மகா சிவராத்திரியன்று பூஜிப்பது புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சிவபெருமானின் பக்தர்கள் பகலில்விரதம் இருந்து இரவு முழுவதும் இறைவனை வணங்குகிறார்கள். சிவராத்திரியில் சிவனை வணங்குவது மகிழ்ச்சியையும், செல்வ செழிப்பையும் வழங்குவதாக நம்பப்படுகிறது. சிவனுக்கு பால், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று நான்கு கால பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறும்.