Lord Muruga Dreams: உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் என முருகனுக்கு உகந்த நாட்களில் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
பக்தர்கள் கனவில் முருகன் வந்தால் என்ன அர்த்தம்? என்பதை கீழே காணலாம்.
அடிப்படையில் முருகன் கனவில் வந்தால் அது நல்ல அறிகுறியாகவே ஆன்மீகத்தில் பார்க்கப்படுகிறது.
1. முருகப்பெருமான் குழந்தை வடிவத்தில் உங்கள் கனவில் காட்சி தந்தால், உங்கள் வீட்டில் புதிய வரவு உண்டாகப்போகிறது என்று அர்த்தம். அதாவது, குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.
2. முருகப்பெருமான் திருமண கோலத்தில் அதாவது வள்ளி - தெய்வானையுடன் கனவில் வந்தால் வீட்டில் சுபகாரியம் நடக்கப்போகிறது என்று அர்த்தம். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று அர்த்தம். அதேசமயம், இதற்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது. வேண்டுதல் நிறைவேற்றப்படாமல் இருந்தால் நிறைவேற்ற வேண்டும் என்பதும் இதற்கு மற்றொரு அர்த்தமாக கூறுவார்கள்.
3. கந்த கடவுளின் வேல் உங்கள் கனவில் வந்தால், உங்களுக்கு எப்போதும் துணையாக அவர் உள்ளார் என்று அர்த்தம்.
4. திருச்செந்தூர் முருகன் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் அந்த கந்தன் அருளால் அகலும் என்பதே அர்த்தம். அதன் பிறகு நீங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைவீர்கள்.
5. சேவற்கொடியோன் சிலை வடிவத்தில் கனவில் வந்தால் நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்த காரியம் ஒன்று கைகூட உள்ளது என்று அர்த்தம்.
6. பழனியில் ஆண்டியாக காட்சி தந்த முருகன் அதேகோலத்தில் கனவில் வந்தால் கஷ்டங்கள் நீங்கி, கடன் சுமைகள் குறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பது அர்த்தம்.
7. பாலாபிஷேகம், தேனாபிஷேகம் என ஏதாவது அபிஷேக கோலத்தில் கந்தன் காட்சி தந்தால் உங்களுக்கு எதிராக இருந்த நிலை அகன்று உங்களுக்கு சாதகமான நிலை வரப்போகிறது என்று அர்த்தம்.
8. சந்தன காப்பு அலங்காரம், ராஜ அலங்கார போன்ற பிரம்மாண்ட அலங்காரத்தில் முருகன் உங்கள் கனவில் வந்தால் வாழ்வில் மிகப்பெரிய ராஜயோகம் அடிக்கப்போகிறது என்று அர்த்தம்.
பொதுவாக முருகப்பெருமான் உள்பட எந்த இறைவன் உங்கள் கனவில் வந்தாலும் அது நல்ல அறிகுறியாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.





















