குலசையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்......ஓம் காளி, ஜெய் காளி கோஷங்கள் முழங்க இன்றிரவு சூரசம்ஹாரம்
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோயிலும் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசை. இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள்.
இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழாவானது மிகச்சிறப்பாக தூத்துக்குடி மாவட்டம் குலசையில்தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. விழா நாட்களில் தினமும் இரவு 8.30 மணிக்கு அம்மன் பல்வேறு வேடங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி உள்பிரகார பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
தசரா முதல் நாளன்று துர்க்கை அலங்காரத்திலும், 2-வது நாள் விசுவகாமேஷ்வரர் அலங்காரத்திலும், 3-வது நாள் பார்வதி அலங்காரத்திலும், 4-வது நாள் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், 5-வது நாள் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்திலும், 6-வது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 7-வது நாள் ஆனந்த நடராசர் அலங்காரத்திலும், 8-வது நாள் அலைமகள் அலங்காரத்திலும், 9-வது நாள் கலைமகள் அலங்காரத்திலும் காட்சியளித்து, திருச்சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கும்.
10-வது நாள் அம்பிகை மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருள, தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவில் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தசரா திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை அணிந்து விரதம் இருக்க கூடிய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் காப்பு வழங்கப்பட்டது.
பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் தசரா திருவிழாவில் காப்பு அணிந்த பக்தர்கள் ராஜா வேடம், காளி வேடம், அம்மன் வேடம், ஆஞ்சநேயர் வேடம் மற்றும் பெண் வேடம் உள்ளிட்ட பல்வேறு விதமான வேடங்கள் அணிந்து பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காணிக்கை பெற்று அதனை மகிஷாசூரசம்காரம் நடைபெறக்கூடிய பத்தாம் திருநாளில் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். மேலும், மாலை அணிந்த பக்தர்கள் அவர்களது ஊரில் தசரா குடில் அமைத்து அதில் தங்கி விரதம் இருப்பார்கள். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் ஒருவேளை மதியம் மட்டுமே பச்சரிசி சாதம் உணவு சாப்பிடுவார்கள்.
இதையொட்டி இன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன்பாக ஏழுந்தருளி மகிசாசூரனை வதம் செய்வார். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அக்டோபர் 6-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், சாந்தாபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறும். சப்பரம் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். இதனை தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடம் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள்.
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக அனைத்து இடங்களிலும் மருத்துவ முகாம் குடிநீர் கழிப்பிட வசதி மற்றும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குலசேகரப்பட்டினத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு கடற்கரை திடலில் சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடற்கரையில் ஆங்காங்கே ரோந்து பணியும் நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்துள்ளது.