(Source: ECI/ABP News/ABP Majha)
'பள்ளிவாசலுக்குள் காவி உடையுடன் சுவாமி ஜி' - நல்லவர் எம்மதமோ ஆண்டவர் அந்த மதம்
இந்துக்கள் நடத்தும் சமூக நல்லிணக்க விழாக்களில் இஸ்லாமியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாக்களை சிறப்பிக்க வேண்டும். இதுதான் தமிழ்நாடு இங்கு மத துவேசத்திற்கு இடம் கிடையாது.
பாசி பட்டினம் தர்காவில் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் கும்பகோணம் திருவடி குடில் சுவாமிகள் பங்கேற்று இஸ்லாமியர்கள் மத்தியில் காவியுடையுடன் உரையாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த தர்காவின் சந்தனக்கூடு விழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இஸ்லாமிய பெருமக்களால் நடத்தப்படும் இந்த சந்தன கூட்டு திருவிழாவிற்கு கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் வந்திருந்து அங்கு பள்ளிவாசலில் குடியிருந்த இஸ்லாமிய மக்கள் மத்தியில் காவி உடையில் உரையாற்றியது மத நல்லிணக்கத்திற்கு பெரும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இஸ்லாமியர்கள் மத்தியில் உரையாற்றிய திருவடி குடில் சாமிகள் பேசுகையில், “இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மும்மதத்தை சேர்ந்த அனைவரும் அனைத்து மத சகோதரர்களும் ஒற்றுமையுடன் திகழ வேண்டும். இஸ்லாமிய பெருமக்கள் நடத்தும் விழாவிற்கு இந்துக்கள் மனம் மகிழ்ச்சியோடு கலந்து கொள்ள வேண்டும். அதேபோன்று இந்துக்கள் நடத்தும் சமூக நல்லிணக்க விழாக்களில் இஸ்லாமியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாக்களை சிறப்பிக்க வேண்டும். இதுதான் தமிழ்நாடு இங்கு மத துவேசத்திற்கு இடம் கிடையாது” என பேசி உள்ளார்.
மேலும், இந்த சந்தனக்கூடு விழாவிற்கு தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சை, திருவாரூர், நாகை சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.