Koovagam Festival: கூவாகம் சித்திரை தேரோட்டம்... தேரை வடம் பிடித்து இழுத்த திருநங்கைகள்
கூத்தாண்டவர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான திருநங்கைகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் (koovagam) கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. 3 ஆம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகளின் குலதெய்வமாக இந்த கோவில் விளங்குகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் திருநங்கைகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க இந்த சித்திரை திருவிழா கடந்த 09 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
பின்னர் 10 ஆம் தேதி மாலை பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் பாரதம் ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 11ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு நாளும் காலை வேளையில் சாந்தனுசரிதம், பீஷ்மர் பிறப்பு, தர்மர் பிறப்பு, பாஞ்சாலி பிறப்பு, பகாசூரம் வதம், பாஞ்சாலி திருமணம், கூத்தாண்டவர் பிறப்பு, ராஜசூய யாகம், வெள்ளிக்கால் நடுதல், கிருஷ்ணன் தூது, அரவாண் பலி, கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சிகளும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பட்டுப்புடவை அணிந்தும், தலைநிறைய பூக்களை வைத்துக்கொண்டும், கைநிறைய வளையல்கள், காது, மூக்கு, கழுத்தில் நகைகளையும் அணிந்து தங்களை புதுமணப்பெண்கள் போல் அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் திருநங்கைகள், கோயிலுக்குள் சென்று அரவாண் சாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்து அரவாணை தங்கள் கணவனாக பாவித்துக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.
அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த திருநங்கைகள், கோவில் வளாகத்தில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரை வழிபட்டதோடு ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி கும்மியடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருநங்கைள் மட்டுமின்றி வேண்டுதலின் பேரில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் தாலி கட்டிக்கொண்டனர். தாலி கட்டிய பிறகு புதுமணப்பெண்கள் போல் காட்சியளித்த திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவில் அருகில் இரவு முழுவதும் விடிய, விடிய நடனமாடியும், கும்மியடித்தும் கூத்தாண்டவரை தனது கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி உற்சாகம் அடைந்தனர்.
விழாவின் 16 ஆவது நாள் நிகழ்ச்சியாக இன்று அதிகாலை கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. தேர் அழிகளம் புறப்பட்டவுடன் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் மதியம் நத்தம் கிராம பந்தலுக்கு தேர் வந்தடைந்ததும் அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழித்து வெள்ளை சேலை அணிந்து விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.