நாள்பட்ட திருமணத் தடை நீங்க கரூரில் உள்ள இந்த ஆலயத்திற்கு வாங்க
பக்தர்கள் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிலர் தங்களது வாரிசுகளுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற ஜாதகத்தை வழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மனுக்கு திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உன்மத்த வாராஹி அம்மனுக்கு மாசி மாத இரண்டாம் ஆண்டு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் உன்மத்த பைரவர், உற்சவர் உன்மத்த வாராஹி அம்மனுக்கு ஆலய மண்டபத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண நறுமணப் பூக்களால் ஆன மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் ஆலய அருகே பிரத்தியேக மேடைகள் அமைக்கப்பட்டு விழா பந்தலில் சுவாமிகளை கொலுவிருக்க செய்தனர். தொடர்ந்து சிறப்பு திருமண கோலத்தில் காட்சி அளித்த வாராஹி அம்மனுக்கு சிவ பக்தர்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர்.
அதைத்தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்புக்கு ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க 30 வகையான காய்கறி, பழங்கள், பூக்கள், இனிப்பு உள்ளிட்ட தாம்பூல தட்டுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கற்பக விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆலயம் அருகே உள்ள வேம்பு மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்து ஊர்வலமாக கற்பக விநாயகர் ஆலயம் வந்தடைந்தனர். பிறகு மேளதாளங்கள் முழங்க உன்மத்த பைரவர் மற்றும் உன்மத்த வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சுவாமிகளுக்கு கண்கானம் கட்டிய பிறகு சுவாமிக்கு பல்வேறு வேத மந்திரங்கள் ஓதியபடி திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து உன்மத்த பைரவர் மற்றும் உன்மத்த வாராகி அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் பால் பழம் வழங்கும் நிகழ்ச்சியும் மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து உதிரிப் பூக்களால் லட்சார்ச்சனை நாமாவளிகள் கூறிய பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு ஆலாத்தி எடுத்தனர்.இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலயத்தின் சிவாச்சாரியார் கார்த்திக் மற்றும் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முடிவில் அனைவருக்கும் திருமாங்கல்ய கயிறு மற்றும் விபூதி உள்ளிட்ட பொருட்களை வழங்கி சிறப்பித்தனர். கரூர் மினி பேருந்து நிலையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற உன்மத்த பைரவர், உன்மத்த வாராகி அம்மன் திருமண நிகழ்வை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிலர் தங்களது வாரிசுகளுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற ஜாதகத்தை வழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
உன்மத்த வாராஹி அம்மன் திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சியை ஆலய சிவாச்சாரியார் மற்றும் சிவனடியார்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட அனைத்து ஆன்மீக பக்தர்களுக்கும் அறுசுவை உணவும் ஆலயத்தில் வழங்கப்பட்டது. கரூர் மினி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.