பக்தி பரவசத்தில் காஞ்சி காவலர்கள்; வரதராஜ பெருமாளுக்கு தீபாராதனை காட்டி சாமி தரிசனம்
kanchipuram : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் தினமும் விஷ்ணு காஞ்சி போலீசார் தீபாரனை மேற்கொண்டு வருகின்றனர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ 4-ம் நாள் மாலை உற்சவம் நடைபெற்றது. சந்தர பிரபை வாகனத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
வைகாசி பிரம்மோற்சவம்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் மாலை உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, பஞ்சவர்ணபூ மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து, வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.
சந்திர பிரபை உற்சவம்
பின்னர் மேளதாள, பேண்ட், வாத்தியங்கள், முழங்க, வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில், பாதம் தங்கிகள் தூக்கிச் செல்ல காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
காவல்துறையினர் செய்யும் செயல்
இந்தநிலையில், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள விஷ்ணு காவல் நிலையத்தில் கடந்த நான்கு நாட்களாக வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, உற்சவங்கள் விஷ்ணு காந்தி காவல் நிலையம் வழியே செல்வதால், பொதுமக்களைப் போன்று காவலர்களும் தீபாராதனை, மாலை மற்றும் பழங்களை நெய்வேத்தியம் செய்து வணங்கி வருகின்றனர்.
ஆச்சரியத்தில் பொதுமக்கள்
தினமும் நான்குக்கும் மேற்பட்ட காவலர்கள் உற்சவ வேளையில் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து, நெய்வேத்தியம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு, பூமாலை, மாம்பழம் உள்ளிட்டவற்றை வைத்து நெய்வேத்தியம் மேற்கொண்டனர் .
ஆண் மற்றும் பெண் காவலர்கள் பக்தி பரவசத்துடன் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர். தினமும் காவலர்கள் வைகாசி பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு தீபாரதனை மற்றும் பூமாலை சாற்றி வழிபாடு மேற்கொண்டு வருவது பொதுமக்கள் இடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.