'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
இந்திய அரசியலமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் மற்றொரு முறை அவமதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர்.என்.உரையுடன் தொடங்கவிருந்த நிலையில், பேரவை மரபு படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், முதலில் தேசிய கீதம் தான் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் சபாநாயகரை வலியுறுத்தியதாகவும் ஆனால், அது மரபு அல்ல என்றும் இறுதியில் இசைக்கப்படும் என்று சபாநாயகர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
அவையை விட்டு வெளியேறிய ஆளுநர் ரவி
இந்நிலையில், இதனை ஏற்காமல் பேரவையில் தன்னுடைய உரையையும் வாசிக்காமல் அவசர அவசரமாக பேரவையை விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பு ஏன் ஆளுநர் இப்படி வெளியேறினார் என்பது குறித்து ஒரு விளக்க அறிக்கையை அளித்துள்ளது அதில்,
’தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமை என்றும் முதலில் தேசிய கீதம் பாடுவதே நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களில் நடப்பது என்றும், ஆனால், தமிழக சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்று ஆளுநர் முதல்வரிடமும் பேரவை தலைவரிடமும் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதமும் இந்திய அரசியலமைப்பும் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் கருதுகிறார் என்றும் ராஜ்பவன் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.”