Hanuman Puja 2022: : தீபாவளிக்கு முன்தினம் ஏன் அனுமன் பூஜையை சிறப்பா கொண்டாடுறாங்க தெரியுமா?
இந்தியாவின் சில மாநிலங்களில் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக வரும் ஐப்பசி மாத சதுர்த்தசி அன்று அனுமன் பூஜை செய்து சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி அதாவது ஐப்பசி மாதம் ஏழாம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இத்தகைய தீபாவளி பண்டிகை வடமாநிலத்தவர்களால் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அதைப்போலவே அன்றைய தினத்திற்கு முன் தினமான ஞாயிற்றுக்கிழமை 23-ஆம் தேதி சதுர்தசி நிதி அன்று ஆஞ்சநேயர் பூஜை வட மாநில மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சில மாநில மக்கள் இந்த 23-ஆம் தேதி அன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியாகவும் அதனை கொண்டாடி வழிபடுகின்றனர்.
ராமபிரானின் தூய பக்தரான அனுமன், அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு பெரும் உதவிகளை செய்து, அவரின் முழு அன்பையும், ஆசியையும் பெற்றவராவார். துளசி மாலை ,வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு கொடுத்து வழிபடுவது விஷேசமானது என கருதப்படுகிறது
பொதுவாக சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அனுமன் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் சில மாநிலங்களில் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக வரும் ஐப்பசி மாத சதுர்த்தசி அன்று அனுமன் பூஜை செய்து சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
தீபாவளிக்கு முன் தினம் இரவு கெட்ட ஆவிகளின் நடமாட்டமும் அவற்றின் சக்தி வாய்ந்த ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என நம்புவதால் அன்றைய தினம் அனுமானை வீட்டில் வணங்கி வழிபடுகின்றனர். தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்து துர்சக்திகளிடமிருந்து தம்மை காப்பாற்றுமாறும் மேலும் வலிமையையும் சக்தியையும் வழங்குமாறு நம்பிக்கையுடன் வேண்டி வடமாநிலங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
ராமபிரான் ஹனுமானின் தூய குணத்தாலும் அர்ப்பணிப்பு தன்மையாலும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் என நம்பப்படுகிறது. ஆதலால் ஆஞ்சநேயரை வணங்கும்படி ஆசீர்வதித்ததால், தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக அனுமன் பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. அயோத்தியில் உள்ள ஹனுமன்கர்ஹி கோவில் போன்ற நாட்டின் சில பகுதிகளில், தீபாவளிக்கு முந்தைய நாள் அனுமன் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது.
காசி ஜோதிஷாச்சார்யா சக்ரபாணி பட்டின் கணிப்பின்படி, ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷத்தில் , அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:04 மணி முதல் தொடங்கும் சதுர்தசி திதி அக்டோபர் 24 மாலை 5:04 மணிக்கு முடிவடைகிறது. எனவே, அக்டோபர் 23ம் தேதி மாலை அனுமன் ஜெயந்தி அல்லது அனுமன் பூஜை வடமாநில மக்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனுமனை வழிபடுவதற்கான நல்ல நேரம் இரவு 11:40 மணிக்கு தொடங்கி ,அக்டோபர் 23 ஆம் தேதி காலை 00:31 மணி வரை வழிபடலாம்.
இந்த ஆண்டு, ஹனுமான் பூஜை சர்வதா சித்தி யோகம் மற்றும் அமிர்த சித்தி யோகத்தில் அனுசரிக்கப்படுகிறது. ஹனுமான் பூஜைக்கான , சர்வதா சித்தி யோகம் மற்றும் அமிர்த சித்தி யோகம் பிற்பகல் 2:34 முதல் மறுநாள் காலை 06:27 வரை இருக்கிறது. இதுதவிர, 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திர யோகமும் காலை முதல் மாலை 16:07 வரை நடைபெறுகிறது.
தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது . இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்தசியில் தென்னிந்தியாவிலும் அதேபோல், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளிப்பண்டிகை
இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளிலும் உள்ள இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அன்று அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் , அதற்கு வாய்ப்பு இல்லாதோர் வீடுகளில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுகின்றனர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புகள், உணவுகள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.
அன்பு, சமாதானம், ஒற்றுமை ஆகியவற்றின் வெளிப்பாடாக தீபாவளி மக்களால் கொண்டாடப்படுகிறது. தீபம் என்றால் ஒளி, விளக்கு என்று பொருள்படும். 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தருவதே தீபாவளி பண்டிகையாகும். தென்னிந்தியாவைப்போல் அல்லாமல் பொதுவாக இந்தியாவில் வட மாநில மக்களால் இந்த தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது