Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Guru Peyarchi 2024 in Tamil: குரு பெயர்ச்சி வரும் மே 1ம் தேதி பிறக்க உள்ளதால், பக்தர்கள் எந்தெந்த கோயிலுக்கு செல்லலாம் என்பதை கீழே விரிவாக காணலாம்.
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி வரும் மே 1ம் தேதி நடைபெற உள்ளது. குரு பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் என்பது பலரின் நம்பிக்கை ஆகும். குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் (Guru Peyarchi Pariharam) செய்ய வேண்டியவர்கள் எந்தெந்த கோயிலுக்கு செல்லலாம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
வலிதாயநாதர் கோயில்:
சென்னை, பாடியில் உள்ள வலிதாயநாதர் கோயில் குருபெயர்ச்சி தினத்தில் சென்று வழிபட வேண்டிய கோயில் ஆகும். பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது ஆகும். அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலான இந்த கோயில் குருபகவான் வழிபட்ட தலம் என்று புராணங்களில் கூறப்படுகிறது. இந்த தலமானது குருபகவானுக்கு மிகச்சிறந்த பரிகார தலம் என்று புராணங்கள் கூறுகிறது.
தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில்:
தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில். இந்த கோயிலில் தேவாரம் பாடல் பாடப்பெற்றுள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது. மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரராக காட்சி சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி தரும் இந்த கோலத்தில், இவர்கள் இருவருக்கும் நடுவில் நின்ற கோலத்தில் குருபகவான் ராஜகுருவாக காட்சி தருகிறார். தோஷங்கள் நீங்க இந்த கோயிலில் உள்ள மங்காம்பிகை - சமேத வசிஷ்டேஸ்வரருடன் காட்சி தரும் குருபகவானை வணங்கினால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
திருவாரூர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் மிகச்சிறந்த குரு பரிகாரத் தலம் ஆகும். இங்கு தட்சிணாமூர்த்தியாக குரு பகவான் காட்சி தருகிறார். குருபகவான் தனது சீடர்களுக்கு 24 அட்சரங் மந்திரத்தை உபதேசித்த காரணத்தால், இங்கு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில், குருபகவானுக்கு மஞ்சள் நிற பட்டுடுத்தி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சிறப்பு என்று கூறப்படுகிறது.
மயிலாடுதுறை மயூரநாதர் கோயில்:
மயிலாடுதுறையில் உள்ள அமைந்துள்ளது மயூரநாதர் கோயில். இந்த கோயில் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். காசிக்கு நிகரான இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.
காரைக்குடி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் அமைந்துள்ளது. இங்கு குரு வடிவத்தில் சிவ பெருமான் தோன்றி கார்த்திகை பெண்களின் சாபத்தை நீக்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில் இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியையும், அந்த கோயிலுக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் வழிபட்டு 12 முறை வலம் வந்தால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.
ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி:
நவ திருப்பதிகளில் ஒன்றாக ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோயில் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கோயில் உள்ளது. நம்மாழ்வார் அவதரித்த இந்த கோயிலில் குருவாக ஆதிநாத பெருமாள் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
திருச்செந்தூர் முருகன் கோயில்:
அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குரு பகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். முருகப்பெருமானை வணங்கி இவரையும் வணங்குவதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிட்டும் என்பது பக்தர்களின் பூரண நம்பிக்கை ஆகும்.
வல்லநாடு கைலாச நாதர் கோயில்:
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லநாடு. இங்குள்ள முறப்பநாட்டில் இந்த கோயில் உள்ளது. நவ கைலாயங்களில் ஒன்றான இந்த கோயிலில், குருவின் அம்சமாக கைலாச நாதர் உள்ளார். இவரை வணங்குவதால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
மேலே கூறிய கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பாகும்.