துர்கா ஸ்டாலின் தலைமையில் நடந்த கீழப்பெரும்பள்ளம் அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
கீழப்பெரும்பள்ளம் அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் துர்கா ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வரின் மகள், மருமகன் உறவினர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சியில் இக்கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு புதிதாக கோயில் கொடிமரம் விநாயகர், ராகு, கேது, பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி பூர்வாங்க பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜையும் தொடங்கியது. தொடர்ந்து, இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது.
அதனை அடுத்து, துர்கா ஸ்டாலின் பச்சை கொடியசைக்க பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட கடங்களில் இருந்த புனித நீரை விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலுக்குள் தமிழக முதல்வரின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், நடிகர் சந்திரசேகர் மற்றும் உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அமைச்சர் மெய்ய நாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூம்புகார் நிவேதா. முருகன் சீர்காழி பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் என பலரும் பக்தர்களுடன் கோயிலுக்கு வெளியில் நின்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலை சுற்றிலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் 300 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மயிலாடுதுறை அருகே சீபுலியூர் கிராமத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம். கிராம மக்கள் ஏராளமானோர் தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்துள்ளது சீபுலியூர் கிராமம். இது கொள்ளிட ஆற்றின் படுகையில் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் தேவதையான கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் முடிவெடுத்து உயில் முழுவதும் புரனமைக்கப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலயத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் கடங்களை வைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்று இன்று யாகம் பூர்ணாகுதி செய்யப்பட்டது.
பின், புனிதநீர் கலசங்களை வேத விற்பன்னர்கள் தலையில் தாங்கி, மேள தாளம் முழங்க, கடங்களின் மீது பக்தர்கள் பூ மாரி பொழிய புனித நீர்கடங்கள் கோபுர விமானத்தை அடைந்தது. பின், மங்கள இசை ஒலிக்க, வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத, புனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கும்பாபிசேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கன்னிகா பரமேஸ்வரியின் அருளை பெற்றனர்.