Diwali 2022 : களைகட்டியாச்சு தீபாவளி.. வீட்டில் இதையெல்லாம் செஞ்சு பாருங்க.. வீடே ஜொலிக்கும்..
வீட்டில் சுத்தம்செய்யும் பணியை ஒரு வாரத்திற்கு ஏற்றவாறு ஏழு பகுதிகளாக பிரித்துக் கொண்டால் சோர்ந்து போகாமல், உற்சாகமாக வேலைகளை செய்ய முடியும்.
தீபாவளி வந்து விட்டாலே, வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். அதற்கு காரணம் புது துணிகள்,பட்டாசு வகைகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக குழுமி இருப்பது என சந்தோஷம் உச்சத்தை தொடும். பெரியவர்களுக்கும் இதில் சந்தோஷம் இல்லை என்று சொல்ல முடியாது.வீட்டில் இருக்கும் ஆண்களை பொருத்தவரை, அல்லது வீட்டில் சம்பாதிக்கும் யாராக இருப்பினும்,செலவுகளுக்கு என்று, அவர்கள் ஒருபுறம் முட்டி மோதிக் கொண்டிருந்தாலும்,அதே அளவு பிரச்சனை அல்லது சவால்கள் இல்லத்தரசிகளுக்கும் இருக்கிறது. அது என்னவெனில் வீட்டை சுத்தம் செய்வதுதான்.
வீட்டை சுத்தம் செய்வதற்கு இல்லத்தரசிகளுக்கு எளிதான வழிகள் நிறைய இருக்கின்றன அவற்றில் சிலவற்றை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்
ஒரே சமயத்தில் அனைத்து வேலைகளையும் செய்யாதீர்கள்:
பொதுவாக,சமையலறையில் இருந்து வெளிப்படும் எண்ணெய் பிசுக்குகள் மற்றும் கறி துகள்கள் என ஒருபுறம் என்றால்,வீட்டின் வாயில் மற்றும் ஜன்னல்கள் வழியாக காற்றில் மிதந்து வரும் தூசுகள் இன்னொரு புறம். இது மட்டுமல்லாது இன்று பெரும்பான்மையான வீடுகளில் அட்டாச் பாத்ரூம் மற்றும் படுக்கைக்கு கட்டில்களை பயன்படுத்துவது, மற்றும் அதில் பயன்படுத்தும் மெத்தையின் அடிப்பாகம் என, பராமரிப்பு தேவை அதிகமான இடங்களும் இதில் அடங்குகிறது. ஆகவே,ஒரு வாரத்திற்கு முன்பே,சுத்தம் செய்யும் பணியை தொடங்குங்கள். உங்களுடைய தினசரி வேலைகளின் கூடவே, ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரங்களோ என ஒதுக்கி,வீட்டில் எத்தனை அறைகள் வருகிறதோ, அல்லது எத்தனை பகுதிகள் இருக்கிறதோ, அவற்றை ஏழு பகுதிகளாக பிரித்துக் கொண்டு, வேலை செய்யுங்கள்.இவ்வாறு செய்வதன் மூலம், சோர்ந்து போகாமல் உற்சாகமாக வேலைகளை செய்ய முடியும்.
சுத்தம் செய்வதற்கு தேவையான கருவிகளை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள்:
துடைப்பம்,ஒட்டடை அடிக்கும் குச்சி, சிறிய ஸ்டூல்கள் அல்லது சிறிய ஏணிகள்,தூசுகளை துடைப்பதற்கு ஈரப்படுத்திய துணி மற்றும் காய்ந்த சிறிய துணி என,உங்கள் இல்லத்தை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை எல்லாம்,முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் கடைசி நேர பரபரப்பு இல்லாமல்,திட்டமிட்டபடி, தினந்தோறும் செய்யும் வேலையில், சில மணித்துளிகள் செலவு செய்து, உங்கள் வீட்டை நீங்கள் சுத்தம் செய்திட முடியும்.
தூசு மற்றும் ஏனைய காற்று மாசுபாடுகளில் இருந்து தப்பிக்க மாஸ்க் மற்றும் கையுறையை பயன்படுத்துங்கள்:
வீடுகளை சுத்தம் செய்வது எவ்வளவு முக்கியமோ,அதே அளவு முக்கியம், நமது உடல் பாதுகாப்பு. ஆகையால், தடிமனான கையுறைகளை பயன்படுத்துங்கள்.அதே போல பல மாதங்களாக, சுத்தப்படுத்தப்படாத இடங்களில் அதிகப்படியான தூசுகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.எனவே முகத்திற்கு மாஸ்கை அவசியம் பயன்படுத்துங்கள்.இவ்வாறு செய்வதன் மூலம் பூச்சுகள்,தூசுக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அதிகம் பயன்படுத்தாத இடங்களை முதலில் சுத்தம் செய்யுங்கள்:
இன்று பெரும்பான்மையான வீடுகளில்,கட்டில் பயன்படுத்தப்படுகிறது.அதில் மெத்தைகளை அமைத்து நாம் பயன்படுத்துகிறோம்.அவ்வாறான மெத்தைகளுக்கு மேற்புறம், உரைகளை போட்டு பயன்படுத்துவோம்.ஆனால் முழு மெத்தையையுமே,நாம் சுத்தப்படுத்தி இருக்க மாட்டோம்.எனவே மெத்தையை எடுத்து,வெயிலில் காய வைத்து,சுத்தம் செய்து பிறகு, தீபாவளிக்கு பயன்படுத்துங்கள். இதைப் போலவே வீடுகளில் பழைய பொருட்களை போட்டு வைப்பதற்கு ஸ்டோர் ரூம்கள் அல்லது ஸ்லாப்புகள் அல்லது வீட்டின் ஒதுக்கு புறம் என, ஒவ்வொரு வீடுகளின் அளவுக்கு ஏற்ப ஸ்டோர் ரூம்களாக சில இடங்கள் மாற்றப்பட்டு இருக்கும். அத்தகைய இடங்களை முதலில் கவனமாக, கையுறைகள் அணிந்து கொண்டு, முகக்கவசம் அணிந்து கொண்டு, துப்புரவு செய்யுங்கள்.
ஏனெனில் இத்தகைய இடங்களை பொருத்தவரை, நாம் தினசரி வேலைகளில் பரபரப்பினால், கவனிக்காமல் விட்டிருப்போம். இங்கு குளவி கூடு அல்லது சிறு பூச்சிகள் அல்லது அளவுக்கு அதிகமான தூசுகள் என்று நிறைய தேங்கி இருக்கும். ஆகவே இத்தகைய இடங்களை முதலில் கவனமாக சுத்தம் செய்யுங்கள்.
அறைகளை மேலிருந்து சுத்தம் செய்தவாறு கீழே வாருங்கள்:
அறைகளை சுத்தம் செய்யும்போது பொதுவாக மேற்புறத்தில் இருந்து கீழ்ப்புறம் நோக்கி சுத்தம் செய்தவாறு வாருங்கள். ஏனெனில் கீழே இருக்கும் செல்ஃபிகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றை சுத்தம் செய்துமுடித்த பிறகு,மேலே இருக்கும் ஸ்லாப்புகளை சுத்தம் செய்தால்,அங்கிருந்து கீழே விழும் ஒட்டடைகள், தூசுகள் மற்றும் தேவையில்லாத பொருட்கள் ஆகியவற்றை திரும்பவும் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். இது உங்கள் வேலையை இரண்டு மடங்காக மாற்றி, உங்களை சோர்வடைய செய்துவிடும்.
ஈரமான பகுதிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுங்கள்:
இன்று பெரும்பான்மையான வீடுகளில் பாத்ரூம் வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறது. ஆகையால் பாத்ரூமில் இருந்து வீட்டை இணைக்கும், அந்த பகுதியில், எந்நேரமும், ஈரமாக இருக்கும் படியான,தொந்தரவு இருக்கிறது, என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆகவே,அதை ஒட்டி உள்ள பகுதிகளை,கவனமாக சுத்தப்படுத்துங்கள்.இதைப்போலவே இன்று எல்லார் வீடுகளிலும் வாஷிங் மெஷின் இருப்பதினால், வாஷிங்மெஷினில்,பின்பகுதியில் தண்ணீர் வெளியேறும் இடத்தில், பூஞ்சைகள் மற்றும் பாசிகள் பிடித்திருக்க வாய்ப்பு உண்டு.எனவே அத்தகைய இடங்களையும் கவனமாக சுத்தம் செய்யுங்கள். இதைப்போலவே பாத்திரம் கழுவும் சிங்கின் அடிபுரத்திலும்,பூச்சிகள்,ஒட்டடைகள் மற்றும் காய்கறி,தானிய கழிவுகள், சிறிது ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த இடங்களையும் கவனமாக சுத்தம் செய்யுங்கள்.
தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுங்கள்:
இப்படி வீடுகளை நாம் சுத்தம்செய்யும்போது பயன்படுத்த முடியாத மற்றும் நீங்கள் அதிகம் பயன்படுத்தாத பொருட்களை வெளியேற்றுங்கள். உடைந்து போன அல்லது சிதைந்து போன பொருட்களை எடைக்கு போடுவதோ அல்லது குப்பையில் போடுவதோ, என்ன,என்பதை தீர்மானித்து,அதை தனியாக பிரித்து வையுங்கள். இதைப்போலவே நாம் பயன்படுத்தாத பொருட்கள் நம்மிடம் இருப்பதை விட, தேவைப்படுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்,அத்தகைய பொருட்கள் எதுவாக இருப்பினும்,இந்த தீபாவளி திருநாளை முன்னிட்டு,உடனடியாக தேவைப்படுபவருக்கு அதை கொடுத்து உதவுங்கள்.