Aippasi 2024: ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி! எப்போது பிறக்கிறது? இத்தனை சிறப்புகளா?
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாதம் எப்போது பிறக்கிறது? என்றும் ஐப்பசி மாதத்தில் வரும் சிறப்புகள் என்னென்ன? என்பது குறித்தும் கீழே விரிவாக காணலாம்.
தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமான புரட்டாசி மாதம் வரும் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. புரட்டாசி மாதத்திற்கு பிறகு வரும் ஐப்பசி மாதமும் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும்.
ஐப்பசி மாத பிறப்பு எப்போது?
நடப்பாண்டிற்கான ஐப்பசி மாதம் வரும் 18ம் தேதியான வெள்ளிக்கிழமை பிறக்கிறது. ஐப்பசி மாதம் வரும் 18ம் தேதி முதல் அடுத்த மாதமான நவம்பர் மாதம் 15ம் தேதி வரை வருகிறது.
பொதுவாக ஐப்பசி மாதத்தை அடைமழைக்காலம் என்று கூறுவார்கள். பருவமழை தொடங்கும் காலமாகவே ஐப்பசி மாதம் குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையும் வரும் 15ம் தேதி முதலே தொடங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை ஐப்பசி மாதத்திலே பெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசிக்கு பிறகு பிறக்கும் இந்த ஐப்பசி மாதத்தை ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி என்றும் கூறுவார்கள். சூரிய பகவான் துலாம் ராசியில் பயணிக்கும் 29 நாட்களே ஐப்பசி மாதம் என்று குறிப்பிடப்படுவதாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மாதத்திற்கு துலா மாதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
ஐப்பசி மாத சிறப்புகள்:
ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக தீபாவளி உள்ளது. இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
துலாம் ராசியானது சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த ராசியாகும். இதனால், இந்த ஐப்பசி மாதத்தில் புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரீங்கநாதர் இந்த மாதத்தில் சுக்கிரனின் அம்சம் நிறைந்தவராக காட்சி தருகிறார். இதனால், இந்த மாதத்தில் ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதன் காரணமாக, இந்த மாதத்தில் காவிரியில் ஸ்ரீரங்கநாதர் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
அன்னாபிஷேகம், கந்தசஷ்டி திருவிழா:
தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றப்படும் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த கந்த சஷ்டி திருவிழா இந்த ஐப்பசி மாதத்திலே கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத பெளர்ணமி சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஐப்பசியில் வரும் பௌர்ணமியில் சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இதே ஐப்பசி மாதத்தில் கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற முக்கிய விசேஷங்களும் நடைபெறுவது வழக்கம்.