ஆனிமாத அமாவாசை...மூலை அனுமார் கோயிலில் கடன் தொல்லை நீக்கும் தேங்காய் துருவல் அபிஷேகம்
அமாவாசை தோறும் தேங்காய் துருவல் அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும், பாலபிஷேகம் செய்து வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மூலை அனுமார் கோயிலில் இன்று ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
தஞ்சை என்றாலே கோயில்கள் நிறைந்த ஊர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இங்குள்ள கோயில்கள் ஒவ்வொன்றும் பக்தர்களின் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றும் ஸ்தலங்களாக உள்ளன. இதனால்தான் தஞ்சைக்கு பிற மாவட்டம் மற்றும் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் தஞ்சையின் பெருமையை மேலும் உயர்த்தும் கோயிலாக மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது என்றால் மிகையில்லை. இதை மூலை அனுமார் கோயில் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாகும் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது. இக்கோயிலை தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மன் கட்டினார். இதில் முக்கிய விசேஷம் என்னவென்றால் கொடிமரத்துடன் கூடிய அனுமனுக்கான தனி பெரும் கோயிலாக இது உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம்.
இக்கோயிலில் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சனி தோஷம் உட்பட நவக்கிரகங்கள் தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் போக்கும் ஸ்தலம். சத்குரு தியாகராஜ சுவாமிகள் வழிபட்ட ஸ்தலம் ஆகும். இக்கோயிலில் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. வாயு மூலையில் அமைந்த ஒரே கோயிலாக இத்தலம் திகழ்கிறது. படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு. அன்று 18 அகல் விளக்குகள் ஏற்றி 18 முறை மவுனமாக கோயிலை வலம் வரவேண்டும். இதனால் குறைகள் விலகி நலம் பயக்கும்.
இத்தலத்தில் அமாவாசை தோறும் தேங்காய் துருவல் அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும், பாலபிஷேகம் செய்து வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் இன்று (புதன்கிழமை) ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
அதன்படி, காலையில் லட்ச ராம நாமம் ஜெபம் நடைபெற்று, வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் தேங்காய் துருவல் அபிஷேகம், பாலபிஷேகம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை மனமுருகி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, மாலையில் தேங்காய்களால் ஆன சிறப்பு அலங்காரமும், அதனையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும், எலுமிச்சை பழங்களால் ஆன மாலைகள் சாற்றி தீபாராதனையும் நடக்கிறது. இந்த சிறப்பு அலங்காரத்தில் அனுமனை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணிப்பாளர் ரவி மற்றும் அமாவாசை கைங்கர்யம் தொண்டர்கள் ஆகியோர் செய்தனர்.





















