Aadi Krithigai 2025: அரோகரா! ஆடிக்கிருத்திகையில் முருகனை எப்படி கும்பிட வேண்டும்? பக்தர்களே படிங்க
Aadi Krithigai 2025 ஆடிக்கிருத்திகையில் முருகப்பெருமானை எப்படி வணங்க வேண்டும் என்று கீழே விரிவாக காணலாம்.

Aadi Krithigai 2025: தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக ஆடிக்கிருத்திகை உள்ளது. ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமே ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது. குழந்தைப் பேறு, திருமண வரம் ஆகியவற்றை தரும் இந்த நன்னாளை எப்படி முருகனை வணங்க வேண்டும் என்பதை கீழே காணலாம்.
நடப்பாண்டில் ஆடி மாதத்தில் ஜுலை 20ம் தேதி( நாளை) மற்றும் ஆகஸ்ட் 16ம் தேதி கார்த்திகை நட்சத்திரம் வருவதால் ஆடிக்கிருத்திகை எப்போது? என்ற குழப்பம் பக்தர்களுக்கு உள்ளது. இந்த இரண்டு நாட்களும் ஆடிக்கிருத்திகையாக போற்றி வணங்கலாம்.
வணங்குவது எப்படி?
ஆடிக்கிருத்திகை நன்னாளில் காலையிலே எழுந்து குளித்துவிட வேண்டும். பின்னர், முருகனை மனதார வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும். இந்த நன்னாளில் காலை முதல் மாலை வரை விரதம் இருக்கலாம். உடல்நலனை கருத்தில் கொண்டு விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் என்று சைவ உணவு உண்டு முருகனை வணங்கலாம்.

இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த கந்த சஷ்டி விரதத்தை பாராயணம் செய்வது சிறப்பாகும். 36 முறை கூற வேண்டும் என்று கூறுவார்கள். முடியாதவர்கள் 3 முறை பாராயணம் செய்வது சிறப்பாகும். மேலும், முருகனின் திருப்புகழ், திருமந்திரங்களை பாராயணம் செய்வதும் சிறப்பாகும்.
வீட்டில் வணங்குவது எப்படி?
வீட்டில் உள்ள பூஜையறையில் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட கோலம் வரைய வேண்டும். இதை ஷட்கோணம் என்பார்கள். இந்த கோலத்தில் அகல் விளக்குகள் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த அகல் விளக்குகள் மீது மல்லி உள்ளிட்ட ஏதாவது பூக்களை வாங்கி பூஜிக்க வேண்டும்.
அப்போது, தங்களுக்கு தெரிந்த முருக மந்திரத்தை அல்லது ஓம் சரவணபவ என்ற முருகனின் நாமத்தை போற்றி வணங்க வேண்டும். பின்னர், கற்பூரம் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். இந்த பூஜையை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் செய்து முருகனை வணங்கலாம். பல்வேறு நன்மைகள் தரும் இந்த ஆடிக்கிருத்திகை நாளில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று மனதார உருகி வேண்டிக்கொண்டால் நன்மைகள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் காணப்படும். இதற்காக சிறப்பு வழிபாடுகளுக்கும், பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கும், வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. சென்னையில் வடபழனி உள்ளிட்ட முருகன் கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக நாளை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.





















