Aadi Month 2023: ஆடி மாதம் பிறந்தது எப்படி? வேப்பமரம் பூமிக்கு வந்தது எப்படி? புராணங்கள் சொல்வது இதுதான்..!
தமிழ்நாட்டில் ஆடி மாதங்களில் கோயில்களில் கூழ் ஊற்றுதல் உள்பட பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
தமிழ் மாதங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதம் வந்துவிட்டாலே ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடப்பது வழக்கம். நடப்பாண்டில் ஆடி மாதம் அடுத்த மாதம் 17-ந் தேதி பிறக்க உள்ளது. அம்மன் ஆலயங்களிலும் மற்ற ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவார்கள். ஆன்மீக மனம் மணக்கும் இந்த ஆடி மாதம் பிறந்தது எப்படி தெரியுமா..?
ஆடி மாதம் பிறந்தது எப்படி?
தேவ குலத்தில் ஆடி எனும் தேவகுல மங்கை இருந்தார். ஒரு முறை சிவபெருமான் கயிலாயத்தில் தனிமையில் இருந்தார். அப்போது, பார்வதி தேவி சிவபெருமான் அருகே வந்தார். பார்வதி தேவி தன் அருகில் வரும்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். அப்போது, தன் அருகே வருவது பார்வதி தேவி அல்ல என்பதை சிவபெருமான் உணர்ந்தார்.
உடனே சீற்றம் கொண்ட சிவபெருமான் தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க முயற்சித்தார். அப்போது, சிவபெருமானின் சூலாயுதத்தில் இருந்து பறந்த பொறி ஆடியின் மேல் பட்டு ஆடியை புனிதம் அடையச் செய்துள்ளது. பின்னர், உருமாறிய ஆடி சிவபெருமானை வணங்கி அவரிடம், “ ஈசனே உங்களது கடைக்கண் பார்வை என் மேல் பட்டுவிட வேண்டும் என்பதற்காகவே இப்படி நடந்து கொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
வரமாக மாறிய சாபம்:
அப்போது, சிவபெருமான் “ என் பார்வதி தேவி இல்லாத தருணத்தில் அவளது வடிவம் கொண்டு நீ வந்தது தவறு. இதனால், பூவுலகில் கசப்புடைய மரமாக பிறப்பாய்” என்று சாபம் அளித்தார். அப்போது, சிவபெருமானை வணங்கி சாப விமோசனம் கேட்ட ஆடியை கண்டு சீற்றம் தணிந்த ஈசன், “ நீ மரமானாலும் ஆதிசக்தியின் அருள் உனக்கு கிடைக்கும். சக்தியை வழிபடுவதுபோல உன்னையும் பக்தர்கள் வழிபடுவார்கள். உன் பெயரில் பூலோகத்தில் ஒரு மாதமே அழைக்கப்படும். நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நன்மையையே அருள்வாய்” என்று அருளினார்.
சிவபெருமான் அளித்த சாபமே வரமாகி மாறிப்போனதால் தேவலோகத்து மங்கை ஆடி மாதமாகவும், வேப்ப மரமாகவும் பூமியில் உள்ளார். புராண கதைகளில் ஆடி மாதம் பிறந்ததற்கான காரணமாக இந்த கதை கூறப்படுகிறது. கோயில்களிலும், கிராமங்களிலும் வேப்ப மரத்தை தெய்வமாக பக்தர்கள் வழிபடுவது குறிப்பிடத்தக்கது. வேப்பமரத்தின் காற்றும், வேப்பமரத்தின் கொழுந்தும் உடலுக்கு மிக ஆரோக்கியமானது என்பதை அறிவியல் மூலமாக நிரூபித்துள்ளனர். வேப்ப மரம் நோய்க்கிருமிகளை தடுக்கவல்லது.
இன்றளவும் அம்மை போடுபவர்களுக்கு வீடுகளிலே தனி அறை ஒதுக்கி வேப்ப இலையிலே படுக்க வைத்து, வேப்ப இலை கொண்ட நீரால் குளிப்பாட்டி அம்மனை வணங்கி வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.