World Malaria Day 2023: உலக மலேரியா தினம்.. நோய்க்கான காரணம் மற்றும் நோய்த்தடுப்பு ஆலோசனைகள்..
ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள். இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா (Sub-Saharan) ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர். மலேரியா தொடர்பாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீத இறப்பு சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி 2021 ஆம் ஆண்டு மட்டும் உலளவில் 21.7 கோடி பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 6.19 லட்சம் பேர் மலேரியாவால் உயிரிழந்தனர். ஆப்ரிக்காவிலேயே அதிகளவில் பாதிப்பு இருந்தாலும் கூட இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 20 ஆயிரம் பேராவது மலேரியாவால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் தேதியன்று சர்வதேச மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. மலேரியாவைத் தடுப்பதிலும் மலேரியாவை ஒழிப்பதிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மலேரியா தொற்று நோய் எப்படி ஏற்படுகிறது?
1.மலேரியா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொசுவின் மூலம் பரவும் தொற்று நோயாகும்.
2.இது பிளாஸ்மோடியம் விவியாக்ஸ் (Plasmodium viviax -P. vivax), பிளாஸ்மோடியம் ஃபால்சிபரும் (Plasmodium falciparum-P. falciparum), பிளாஸ்மோடியம் மலேரியே (Plasmodium malariae-P. malariae) பிளாஸ்மோடியம் ஓவேல் (Plasmodium ovale-P. ovale) ஆகிய பாரசைட்டுகளால் ஏற்படுகின்றன.
3.மனிதர்களுக்கு மலேரியாவைப் பரப்பும் இரு வகை ஒட்டுண்ணிகள் இந்தியாவில் பரவலாக அறியப்படுகின்றன (பிளாஸ்மோடியம் விவாக்ஸ், பிளாஸ்மோடியம்: பால்சிபரும்). பாரசைட்டைக் கொண்ட பெண் அனஃபெலஸ் இனக் கொசு கடிக்கும் போது, எச்சிலின் மூலமாக ப்ரொடிஸ்டா (விலங்கு-தாவர ஓரணு உயிர்) இரத்த ஒட்டத்தில் செலுத்தப்படுகிறது, இப் ப்ரொடிஸ்டா கல்லீரலை அடைந்து வளர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது.
மலேரியா நோயின் அறிகுறிகள்:
மலேரியா நோயின் அறிகுறிகளில் பொதுவாகக் காய்ச்சலும் தலைவலியும் இடம்பெற்று இருக்கும். கடுமையான நேர்வுகளில் இது ஆழ்மயக்கம் அல்லது மரணத்தில் முடியும்.
1. மலேரியாவின் அறிகுறிகளாவன காய்ச்சல், உடல் நடுக்கம், மூட்டுவலி (மூட்டுகளில் வலி ஏற்படுதல்), வாந்தி, இரத்த சோகை (இரத்தமழிதலினால் ஏற்படுகிறது), ஈமோகுளோபின் நீரிழிவு, விழித்திரை சேதமடைதல்,[6] மற்றும் வலிப்புகள். சுழற்சி முறையில் ஏற்படும் திடீர் குளிர்மத்தைத் தொடர்ந்து குளிர்நடுக்கம் ஏற்படும். அதன் பிறகு காய்ச்சலும் வியர்வையும் 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும். இவைகள் மலேரியாவின் முதல்நிலை அறிகுறிகளாகும்.
2. மலேரியாவின் கடுமையான நோய்த் தாக்கத்தை P. ஃபால்ஸிபாரம் நோய்த்தொற்று தான் அதிகமாக ஏற்படுத்துகிறது. வழக்கமாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு 6 முதல் 14 நாட்களில் இந்த நோய் தீவிரமடையும்.[13] ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் இறப்பு ஆகியவை மலேரியாவின் கடுமையான நோய் நிலையின் விளைவுகளாகும்.
மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்:
1. கொசுவர்த்தி, கொசுவிரட்டி திரவம் போன்றவற்றை பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தற்காத்துக் கொள்ளவும்
2. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்கலாம்
4. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆன்ட்டி ட்யூமர் மருந்துகள் கல்லீரல் செல்களில் பல்கிப் பெருகும் மலேரியா நோயை தடுக்கவல்லது என்று உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது.
5. RTS, S/AS01 போன்ற தடுப்பூசிகள் குழந்தைகள் P falciparum ஒட்டுண்ணி மூலம் ஏற்படும் மலேரியா தொற்றிலிருந்து பாதுகாக்கும்.
பொது சுகாதார பிரச்னை:
தொற்று நோய்களில் மிகவும் அபாயகரமானது மலேரியா. இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நிமோனியா, டயோரியா நோய்களுக்குப் பிறகு அதிகமான குழந்தைகள் இந்த நோயின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது.
ஆப்ரிக்காவில் மலேரியா:
ஆப்ரிக்காவின் சகாராவைச் சார்ந்த பெரும் பகுதியையும் ஆசியாவையும் உள்ளடக்கிய பூமத்திய ரேகைச் சுற்றியுள்ள அகன்ற பட்டையான வெப்பம் மற்றும் அரைவெப்ப மண்டலப்பகுதியில் (Tropical and Sub Tropical Regions) இந்த நோய் சற்று பரவலாக காணப்படுகிறது.
இந்தியாவில் மலேரியா:
இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள மலேரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மலேரியா பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டைவிட, 2019ம் ஆண்டில் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு குறையும் ஒரே நாடு இந்தியா. மேலும், இந்தியாவில் மலேரியா பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. 2019ம் ஆண்டு மலேரியா பாதிப்பு 21.27 சதவீதமும், உயிரிழப்பு 20 சதவீதமும் (3,38,494 பாதிப்பு, 77 உயிரிழப்பு) குறைந்துள்ளது.
2017 முதல் 2022 வரையிலான மலேரிய ஒழிப்புக்கான தேசிய உத்தி திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது என்றும், இதன் காரணமாக முதல் 2 ஆண்டுகளுக்கு, உயிரிழப்பு 27.7 சதவீதம் மற்றும் 49.5 சதவீதம் குறைந்தது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.