US on India Tariff: நல்ல கதையா இருக்கே.! ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவுக்கு வரியாம் - அமெரிக்கா சொல்லுது.!
உக்ரைனை தொடர்ந்து தாக்கிவரும் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே, இந்தியாவிற்கு வரியை இரட்டிப்பாக்கியதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவிற்கான வரியை இரட்டிப்பாக்கியதோடு, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்காக அபராதமும் விதிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், வரியை அவர் இரட்டிப்பாக்கியதே ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகத் தான் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். அவரது பேட்டி குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தியாவிற்கு ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
இந்தியாவிற்கு ஏற்கனவே 25 சதவீத வரியை விதித்து, அதை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கெடு முடிந்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வரிகள் அமலுக்கு வருவதாக அறிவித்தார். அது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்ததால், இந்தியாவிற்கான மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது.
அதோடு விடாமல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியாவிற்கு அபராதம் விதிப்பதாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும், ரஷ்யா உடன் வர்த்தகம் செய்வதன் மூலம், உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவி செய்வதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். அதோடு, ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்துமாறும் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்தார்.
ஆனால், இந்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனால் ட்ரம்ப் மேலும் கோபமடைந்தார். இந்த சூழலில் தான், ரஷ்ய அதிபர் புதினுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டாலும், பேச்சுவார்த்தை நேர்மறையாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
“ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவிற்கு வரி“
இப்படிப்பட்ட சூழலில், உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவிற்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்கு கொண்டுவர, ரஷ்யா மீது மறைமுக அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகதியாகவே, இந்தியாவின் மீது கடுமையான வரிகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்ததாக கூறியுள்ளார்.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர மிகப் பெரிய பொது அழுத்தத்தை ட்ரம்ப் அளித்துள்ளார் என்றும், இதில் இந்தியா மீதான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் ட்ரம்ப் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், அடுத்த சந்திப்பிற்கு இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் என்று பிறர் கூறும் கருத்துக்களை ட்ரம்ப் கேலி செய்துள்ளதாகவும் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இந்த போரை வெகு விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள அவர், வெள்ளை மாளிகையில் இருந்து பேச்சுவார்த்தைக்குப் பின் கிளம்பிச் சென்ற ஐரோப்பிய தலைவர்கள், நேட்டோ பொதுச் செயலாளர் உள்ளிட்டோர், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வெற்றிகரமான முதல் படி இந்த சந்திப்பு என்று தெரிவித்ததாகவும் கரோலின் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசும், ட்ரம்ப் நிர்வாகமும் பேசி, ரஷ்யா-உக்ரைன் இடையே சுமூக உறவுகள் ஏற்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என கரோலின் லீவிட் உறுதி அளித்துள்ளார்.





















