Russia Wagner Mercenary: பணிந்தது வாக்னர் கூலிப்படை.. ரஷ்யாவில் தணியும் உள்நாட்டுப்போர் பதற்றம்.. வழக்கை முடிக்க முடிவு
அமைதி ஒப்பந்தத்திற்காக பெலாரஸ் செல்ல உள்ளதை தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கிச் செல்லும் நடவடிக்கையை நிறுத்துவதாக வாக்னர் கூலிப்படை அறிவித்துள்ளது.
அமைதி ஒப்பந்தத்திற்காக பெலாரஸ் செல்ல உள்ளதை தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கிச் செல்லும் நடவடிக்கையை நிறுத்துவதாக வாக்னர் கூலிப்படை அறிவித்துள்ளது.
ரஷ்யா - வாக்னர் இடையேயான மோதல்:
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் வாக்னர் குழு எனப்படும் தனியார் ராணுவம் அல்லது கூலிப்படை எனப்படும் துடுப்புகள் முக்கிய பங்காற்றின. ஆனால், ரஷ்யாவின் ராணுவ தலைமைக்கும், வாக்னர் குழுவின் தலைவர் எக்னி பிரிகோசினுக்கும் இடையேயான அதிகார மோதல் காரணமாக, அந்த அமைப்பின் உதவியை வேண்டாம் என புதின் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தனது துடுப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஏராளமான வீரர்களை கொன்றதோடு, உக்ரைன் படையெடுப்பை நியாயப்படுத்த பல்வேறு பொய்களை கூறுவதாக ரஷ்ய ராணுவ தலைமை மீது எக்னி பிரிகோசின் குற்றம்சாட்டினார்.
ஆயுதமேந்திய புரட்சிக்கு அழைப்பு:
கிரெம்ளினின் உயர்மட்ட அதிகாரிகளின் "தீமையை" நிறுத்தப்போவதாக அறிவித்த எக்னி ”நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். ராணுவ தலைமையை ஓரங்கட்டுவோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறி செல்கிறோம், இறுதிவரை செல்வோம். வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும்” என பேசியிருந்தார்.
புதின் எச்சரிக்கை:
இதையடுத்து வாக்னர் கூலிப்படையினர் ரஷ்யாவின் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதை அடுத்து, மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக பேசிய ரஷ்ய அதிபர் புதின், ”துரோகிகளிடம் இருந்து நமது நாட்டை நாம் பாதுகாப்போம். வாக்னர் குழுவினர் சரணடைய வேண்டும்” என எச்சரித்தார். அதோடு, வாக்னர் படைய்ன் தலைமையை கைது செய்யவும் கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது.
கையெழுத்தாகும் ஒப்பந்தம்:
இந்த சூழலில் தான், மாஸ்கோவை நோக்கிச் செல்லும் முடிவை வாக்னர் குழு நிறுத்தியுள்ளதோடு, படைகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகளை திரும்பப் பெறுவதாக எக்னி பிரிகோசின் அறிவித்துள்ளார்.
ரஷ்யா வெளியிட்ட அறிக்கை:
இதனிடையே, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி "கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தனியார் ரஷ்ய ராணுவ நிறுவனமான வாக்னர் குழு தலைவர் அண்டை நாடான பெலாரசுக்குச் செல்கிறார். அவர் மீதான கிரிமினல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. வாக்னர் கலகம் உக்ரைன் தாக்குதல் திட்டங்களை பாதிக்காது. வாக்னர் படை வீரர்களை ரஷ்யா தண்டிக்காது. அவர்களின் வீரச் செயல்களை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.