Watch Video : விமானத்தில் நடுவானில் சண்டை..! போகவிட்டு பொடனியில் அடித்த பயணி..! வைரலாகும் வீடியோ
மெக்சிகோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் விமான பணியாளரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோவில் அமைந்துள்ளது லாஸ்கபோஸ் நகரம். இந்த நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தினசரி பிற நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், லாஸ்கபோஸ் நகரத்தில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்றது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமான நிறுவனத்தின் பணியாளரை தாக்கிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
A man was arrested by Los Angeles Airport police after assaulting a flight attendant on an American Airlines flight from Cabo. pic.twitter.com/2VDXxIqUfn
— 🇺🇸BellaLovesUSA🍊 (@Bellamari8mazz) September 22, 2022
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு விமானத்தில் செல்ல வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. புதன்கிழமை அன்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 377 இல் இந்த சம்பவம் நடந்தது. விமானத்தில் பயணித்த மற்றொரு பயணி இச்சம்பவத்தை கேமராவில் பதிவு செய்தார். பின்னர், அந்த செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பிற்பகல் 3.30 மணி அளவில் (உள்ளூர் நேரம்) விமானம் தரையிறங்கியது. இதையடுத்து, அப்பயணி உடனடியாக பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) அலுவலர்களால் வெளியேற்றப்பட்டார் என தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் மற்றும் பிற தளங்களில் பரவி வரும் 33 வினாடிகள் வீடியோவில், விமான பணியாளர் ஒருவர் பயணியிடம், "என்னை மிரட்டுகிறாயா?" என்று கேட்பதை பார்க்கலாம். பின்னர், அதை கேட்டுவிட்டு அவர் நகர்ந்து செல்லும்போது, ஆரஞ்சு நிற சட்டை அணிந்த நபர், விமான பணியாளரின் தலையின் பின்புறத்தில் சரமாரியாக தாக்குகிறார்."ஓ மை காட்" என மற்ற பயணிகளின் அலறலையும் வீடியோவில் கேட்கலாம். ஒரு பயணி, "நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என தாக்கிய நபரை நோக்கி கேட்கிறார்.
தாக்குதலுக்கு உள்ளாகி கீழே விழுந்த விமானப் பணியாளரை காப்பாற்ற ஒரு விமானப் பணிப்பெண் வருவதை பார்க்கலாம். தாக்குதல் நடத்தியவர் விமானத்தில் இருந்து அகற்றப்படும் வரை ஜிப் டைகளைப் பயன்படுத்தி மற்ற பயணிகள் அவரை கட்டி போட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் கலிபோர்னியாவில் வசிக்கும் 33 வயதான அலெக்சாண்டர் துங் குயு லீ என அமெரிக்க நீதித்துறை அடையாளம் கண்டுள்ளது. விமானக் குழு பணியாளர்களிடம் குறுக்கீடு செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
லாஸ் கபோஸ் விமான நிலையத்திலிருந்து விமானம் 377 புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கிக் கொண்டிருந்த விமானப் பணிப்பெண்ணின் தோளைப் பிடித்துக் கொண்டு லீ காபி கேட்டுள்ளார். பின்னர், அவர் முன்புறம் சென்று முதல் வகுப்பு அறைக்கு அருகில் ஆளில்லாத வரிசையில் அமர்ந்தார்.
மற்றொரு விமானப் பணிப்பெண் லீயிடம் தனது இருக்கைக்குத் திரும்பும்படி கேட்டபோது, அவர் தனது இரு கைகளையும் பிடித்தபடி சண்டையிடும் தொனியில் நின்றார். விமான பணியாளர், இவரின் நடத்தையை விமானியிடம் தெரிவிக்க முடிவு செய்து திரும்பினார். அப்போதுதான், லீ அவரைத் தாக்கினார்.