Trump Tariff: ”பாய்ஸ் இந்தியாவை அட்டாக் பண்ணுங்க” ஐரோப்பிய நாடுகளை குத்தி விடும் ட்ரம்ப்
Trump Tariff: இந்தியாவின் மீது வரி விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Trump Tariff: பிரதமர் மோடி பங்கேற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், ட்ரம்பின் வரி நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக பேசப்படும் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் அழுத்தம்:
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை பின்பற்றி ஐரோப்பிய நாடுகளும் அந்த நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என, அதிபர் ட்ரம்பின் வெள்ளை மாளிகை தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக இந்தியாவில் இருந்து வாங்கும் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தையும் முற்றிலுமாக நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாம். மேலும், உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாதற்காக இந்தியாவிற்கு அமெரிக்கா விதித்ததை போன்ற, அபராத வரிகளையும் ஐரோப்பிய நாடுகள் விதிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளதாம்.
அமெரிக்காவின் பாசாங்குதனம்:
இந்தியா எண்ணெய் வாங்கும் பணத்தில் தான் ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் தொடர்வதாக குற்றம்சாட்டி, அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. தங்களை காட்டிலும் ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கும் சீனாவின் மீது நடவடிக்கை எடுக்காமல், இந்தியாவின் மீது அதிகப்படியான வரி விதிப்பு என்பது மேற்கத்திய நாடுகளின் பாசாங்குதனத்தை காட்டுவதாக மத்திய அரசு சாடி வருகிறது. ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து ஆற்றல் சார்ந்த பொருட்களை வாங்கியபடியே உள்ளன. ஆனால் அவற்றின் மீதெல்லாம் வரி விதிக்காதது ஏன்? எனவும் தொடர்ந்து இந்தியா கேள்வி எழுப்பி வருகிறது.
மவுனம் காக்கும் ஐரோப்பிய நாடுகள்:
உக்ரைன் - ரஷ்ய போரை நிறுத்த வேண்டும் என்ற ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேநேரம், ரஷ்யா உடனான வர்த்தகத்தால் இந்தியா மீது கடுமையாக நடந்து கொள்ளும் அமெரிக்காவின் செயல்பாடுகள் தொடர்பாக, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியே காத்து வருகின்றன. இந்நிலையில் தான், இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளுக்கும் ட்ரம்ப் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிருப்தியில் ட்ரம்ப்
சில தியாகங்களை செய்து அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால், லாபம் இன்றி எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்க வேண்டாம் என, ஐரோப்பிய தலைவர்கள் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வருகின்றரனராம். இது வெள்ளை மாளிகை அதிகாரிகளையும், ட்ரம்பையும் கடுப்பாக்கியுள்ளது.
இதனிடையே, சீனாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜிங் பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவின் மீது அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்பான விவாதம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.





















