Donald Trump: ”அதெல்லாம் சப்ப மேட்டர்” ஈசியா தீத்து வெச்சுடுவேன், ஆனா வேலை இருக்கே - ட்ரம்ப் பேச்சு
Pak Vs Afg Donald Trump: பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையேயான மோதலை தீர்த்து வைப்பது, மிக எளிதான காரியம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Pak Vs Afg Donald Trump: போர்களை தீர்த்து வைப்பதை விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
”ஈசியா தீர்த்துடுவேன்”
பாகிஸ்தானுக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை "எளிதாக" தீர்க்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தனது பதவிக் காலத்தில் பல மோதல்களை வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளதாகவும் நினைவுகூர்ந்துள்ளார். வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் ஒரு மதிய உணவு நிகழ்வில் பேசிய ட்ரம்ப், “பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது அல்லது ஆப்கானிஸ்தானுடன் தாக்குதல் நடந்து வருகிறது என்பதை நான் புரிந்துகொண்டாலும். அதைத் தீர்க்க வேண்டும் என்றால் அதைத் தீர்ப்பது எனக்கு எளிதானது. இதற்கிடையில், நான் அமெரிக்காவை வழிநடத்த வேண்டும், ஆனால் போர்களைத் தீர்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் தெரியுமா? மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பது எனக்குப் பிடிக்கும், மேலும் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளேன்” என்றார்.
மீண்டும் மீண்டும் பெருமை பேசும் ட்ரம்ப்
தொடர்ந்து பேசுகையில், ருவாண்டா, காங்கோ மற்றும் இந்தியா-பாகிஸ்தான் உட்பட உலகளாவிய மோதல்களை மத்தியஸ்தம் செய்வதில் தனது கடந்தகால சாதனைகளை டிரம்ப் மீண்டும் குறிப்பிட்டார். அதன்படி, “நான் எட்டு போர்களைத் தீர்த்துவிட்டேன். ருவாண்டா மற்றும் காங்கோ, இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பற்றிப் பேசுங்கள். நாங்கள் தீர்த்த அனைத்துப் போர்களையும் பாருங்கள், நான் தீர்த்த ஒவ்வொரு முறையும், அடுத்ததை நீங்கள் தீர்த்தால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர்கள் கூறும்போது. எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் அதைப் பெற்றார், அவர் ஒரு நல்ல பெண். அவள் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவள் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவள். அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதில் மட்டுமே எனக்கு அக்கறை இருக்கிறது ”என்று டிரம்ப் பேசியுள்ளார். பாகிஸ்தான் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததில், அமெரிக்காவின் பங்கீடு இல்லை என மத்திய அரசு பலமுறை விளக்கமளித்தாலும் கூட, இருநாடுகளுக்கு இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது தானே என ட்ரம்ப் மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்.
தொடரும் பாக்., - ஆஃப்., பதற்றம்
பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் பிரச்னையில் முடிந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான 48 மணி நேர போர் நிறுத்தமானது, இரு தரப்பினரும் தோஹாவில் பேச்சுவார்த்தை நடைபெறும் வரை நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், பாக்டிகா மாகாணத்தின் பல மாவட்டங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், மூன்று கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அமைதி ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.




















