பெண்கள் சீரியலில் நடிக்க தடை: சீரியஸாக திடீர் சட்டத்தை இயற்றிய தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சிகளுக்கு தலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001 ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சி செய்தபோது பெண்களின் சுதந்திரம் மிகவும் ஒடுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. அங்கு வசிக்கும் முஸ்லீம் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்பது கனவில் கூட நினைக்க முடியாதவையாகவும், 8 வயது முதலே பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும் போன்ற சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டது.
இந்தநிலையில்,ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடித்த தலிபான்கள் தற்போது தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு என புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி, பெண் செய்தியாளர்கள் மற்றும் செய்திவாசிப்பாளர்கள் தங்களின் தலை மற்றும் முகத்தினை மறைத்து கொள்ளும் வகையில் ஆடைகள் அணியவேண்டும் என்றும், இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக கருதப்படும் திரைப்படங்கள் ஆப்கானிஸ்தானில் வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், தொலைக்காட்சி நாடக தொடர்களில் பெண்கள் நடிக்க தடைவிதித்தும், இஸ்லாமிய மதம் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களை காயப்படுத்தும் போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இதுகுறித்து தலிபான்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் நற்பண்புகளை ஊக்குவித்தல் மற்றும் துன்மார்க்கத்தை தடுப்பதற்காக இந்த விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்தனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் பெண்கள் எந்தவொரு விளையாட்டுகளிலும் கலந்துகொள்ள கூடாது எனவும், எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது எனவும் தலிபான்கள் தடைவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் கல்வி :
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு அனுமதியளிக்கப்பட்டு அதற்கான சில நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.
1. பெண்கள் ஹிஜாப் அணிந்தே கல்வி நிலையங்களுக்கு வர வேண்டும்.
2. பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் பாடம் நடத்துவர்.
3. பல்கலைக்கழகங்களில் இருபாலர் வகுப்புகளுக்கு இடமில்லை.
4. கல்லூரிகளில் இருபாலர்கள் வகுப்புகள் நடந்தால் நடுவில் திரை வைக்கப்பட வேண்டியது கட்டாயம்.
5. பெண் பிள்ளைகளுக்கு ஆண்கள் வகுப்பு எடுக்க நேர்ந்தால் ஆன்லைன் வாயிலாக வகுப்பெடுக்கலாமே தவிர நேரடியாக வகுப்பு எடுக்க முடியாது என உத்தரவிட்டிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
‛வேண்டுமென்றே கோளுடன் மோதும் நாசா’ - என்ன காரணமா இருக்கும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்