Afghanistan Crisis Update :2014ல் ஒபாமா எடுத்த தவறான முடிவு... 2021ல் தலிபான்கள் வெற்றிக்கு அடித்தளம்!
2014ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்த பராக் ஒபாமா விடுதலை செய்த 5 தலிபான்களால், ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் ஆட்சியை கைப்பற்றியது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுப்படைக்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையின் இறுதியில் ஆப்கான் படைகள் வெற்றி பெற்று அந்த நாட்டில் ஆட்சியை பிடித்துள்ளனர். 20 ஆண்டுகளாக அந்த நாட்டில் அமெரிக்க படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காரணத்தால் தலிபான்களால் முன்னேற முடியாமல் தவித்து வந்தனர். அமெரிக்க படைகளை அந்த நாட்டு அரசு திரும்ப பெற்றுக்கொண்டதால், தலிபான்கள் படிப்படியாக முன்னேறி நாடு முழுவதையும் கைப்பற்றியுள்ளனர்.
தலிபான்கள் நாட்டை கைப்பற்றிவிட்டதால் அந்த நாட்டில் இருந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் தங்களது புதிய அதிபர், நிர்வாகிகள், பாதுகாப்பு பணிகளை குறித்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதற்கு அமெரிக்கா ஆப்கானிஸ்தானை கைவிட்டதே காரணம் என்று பல்வேறு நாட்டு மக்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு கடந்த 2014ம் ஆண்டு பராக் ஒபாமா எடுத்த ஒரு முடிவும் ஒரு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
2014ம் ஆண்டு அமெரிக்கா ராணுவ வீரர்களை தலிபான்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து, அமெரிக்க ராணுவ வீரர்களை விடுவிக்க வேண்டும் என்றால், அமெரிக்காவின் கான்டனமோ பே சிறையில் இருந்த தலிபான் அமைப்பின் 5 முக்கிய தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
அவர்களின் நிபந்தனையை நீண்ட ஆலோசனைக்கு பிறகு, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்றுக்கொண்டார். இருப்பினும், அமெரிக்க உளவுத்துறை, அதிபர் ஒபாமா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், அவர்களின் அறிவுறுத்தலை ஏற்காத ஒபாமாவின் முடிவால், சிறையில் இருந்த தலிபான்களின் முக்கிய தலைவர்களாகிய கைருல்லா கைர்க்வா, முகமது நபி, முகமது பசல், அப்துல் ஹக் வாசிக், முல்லா நூருல்லா நூரி ஆகிய 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களை தலிபான்களிடம் ஒப்படைத்து அமெரிக்க வீரர்களை அந்த நாட்டு அரசாங்கம் மீட்டது. ஆனால், அமெரிக்க அரசாங்கம் விடுவித்த இந்த 5 நபர்களும் ஆப்கானிஸ்தானை இன்று தலிபான் கைப்பற்றுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளனர். இந்த தலைவர்கள் தான் தலிபான்களை மீண்டும் இணைத்தனர்.
குறிப்பாக, கைருல்லா கைர்கா பல்வேறு குழுக்களாக பிரிந்து கிடந்த தலிபான்களை மீண்டும் இணைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர். முகமது நபி கலாத்தில் தலிபான்களில் தலைமை தளபதியாக பொறுப்பு வகித்தவர். அப்துல் ஹக் வாசிக் தலிபான்களின் உளவுப்பிரிவின் துணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். முல்லா நூருல்லா நூரி தலிபான்களின் மூத்த தளபதியாக 2001ம் ஆண்டு பொறுப்பு வகித்தவர்.
பராக் ஒபாமா 2014ம் ஆண்டு எடுத்த அந்த முடிவால் இன்று ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் மீண்டும் தலிபான்களின் கைகளுக்கு சென்றுள்ளது. தற்போது அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், கைருல்லா கைர்க்வாவும் அவருடன் விடுவிக்கப்பட்ட 4 தலிபான்களும் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே சபதம் எடுத்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இந்த கைருல்லா கைர்க்வா என்றும் தெரிவித்துள்ளனர்.