தயவு செஞ்சி ஒரு குழந்தையாவது காப்பாத்துங்க...சிரிய நிலநடுக்கம்.. பதறவைக்கும் தந்தையில் கதறல்..
இந்த நிலநடுக்கத்தால் பல குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. அந்த வகையில், நாசர் அல்-வக்கா என்பவர், ஆறு குழந்தைகளை நிலநடுக்கத்தால் இழந்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6ஆம் தேதி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.
திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை மட்டும் ஐந்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலைமை மிக மோசமாக மாறியது. நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. காலை நேரம் என்பதால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் உடனடியாக வெளியேற முடியவில்லை.
இதனால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் துருக்கி மற்றும் சிரியாவை சேர்ந்த உள்நாட்டு மீட்பு படையினர் மட்டுமின்றி, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்களின் உதவியுடனும், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள், கடும் பனிப்பொழிவால் தங்க இடம் இன்றி தவித்து வருகின்றனர். ஐந்து நாள்களுக்கு பிறகும் சிலர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்களும் அங்கு நடைபெற்று வருகிறது. அதேநேரம், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
துருக்கியில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சிரியாவில் மட்டும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2011ஆம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக உயிரிழப்பு, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பல குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. அந்த வகையில், நாசர் அல்-வக்கா என்பவர், ஆறு குழந்தைகளை நிலநடுக்கத்தால் இழந்துள்ளார்.
சிரியா ஜந்தாரிஸ் நகரை சேர்ந்த நாசர் அல்-வக்காவின் இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த இரவில் இடிபாடுகளின் அடியே சிக்கி கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை மீட்பு படையினர் மீட்ட வீடியோ வெளியாகியது.
அவரது இன்னொரு குழந்தையும் உயிர் பிழைத்துள்ளது.அவரது எத்தனை குழந்தைகள் உயிரிழந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால், உயிரிழந்தவர்களின் பட்டியலில் அவரது ஆறு குழந்தைகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் உயிரிழந்தது.
இந்த மோசமான நிலைநிடுக்கத்தை சமாளிக்க துருக்கிக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன்படி, ஆபரேஷன் தோஸ்த் மூலம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள், மீட்பு படைகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளது.