20 கிலோவா? கிம் ஜோங் உன்னா? : தென்கொரியா உளவுத்துறை சொன்ன தகவல் தெரியுமா?
அவரது உடல் எடை மற்றும் உயரத்தை வீடியோ வழியாக கணித்து அது உண்மையிலேயே கிம் ஜாங் உன் தான் என்பதை உறுதிசெய்துள்ளது உளவுத்துறை.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சுமார் 20 கிலோ வரை உடல் எடை குறைத்தது சர்வதேச அளவில் பேசப்பட்டு வந்தது. இதற்கிடையே அது உண்மையான கிம் ஜாங் உன் இல்லை அவர் தனக்கு பதிலாக டூப்பை (Body double) உபயோகிக்கிறார் என்கிற வதந்தி உலாவி வந்தது. இதனை இல்லை எனத் தற்போது உறுதி செய்துள்ளது தென்கொரிய உளவுத்துறை. 2019ம் ஆண்டு வரை 140 பவுண்ட் எடை இருந்த கிம் ஜாங் உன் அதன் பிறகு சுமார் 20 கிலோ வரை தனது உடல் எடையைக் குறைத்துள்ளார். அவரது உடல் எடை மற்றும் உயரத்தை வீடியோ வழியாக கணித்து அது உண்மையிலேயே கிம் ஜாங் உன் தான் என்பதை உறுதிசெய்துள்ளது உளவுத்துறை.
முன்னதாக, வடகொரியாவில் கொரோனா பேரிடர் காலத்தை அடுத்து உணவுப் பற்றாக்குறை பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. கொரோனா பேரிடர் காரணமாக பிறநாடுகளுடனான ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் மூடியுள்ளது வடகொரியா. இதனால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அதனால் இருப்பில் இருக்கும் உணவை சேமிப்பில் வைக்கச் சொல்லியிருக்கிறார் கிம் ஜாங் உன்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்றாலே கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் என்ற வார்த்தைகளும் கூடவே நினைவில் வந்து ஒட்டிக்கொள்ளும். இன்னும் ஒருபடி மேலாக அவரின் அரசியல் பாணியை சர்வாதிகாரம் என்றே சர்வதேச அரங்கம் விமர்சிக்கிறது. நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு அனைத்தையும் ரகசியமாகவே வைத்திருப்பார் கிம். ஏன்? வடகொரியாவில் கொரோனா என்ன நிலையில் இருக்கிறது என்றுகூட யாருக்கும் தெரியாது. இதுவரை தங்கள் நாட்டில் 25986 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும் ஆனால் இதுவரை ஒருவருக்குக் கூட தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் சொல்கிறது வடகொரியா. நாட்டின் தகவலையே ரகசியமாக கட்டிக்காக்கும் கிம், தன்னுடைய உடல் நிலை குறித்து மூச்சுவிடுவாரா? அதனால்தான் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது பல செய்திகள் வெளிவந்தன. கையில் கட்டியிருக்கும் கடிகாரம் இறுக்கிக் கொண்டிருக்க, பருத்த முகத்துடன் இருப்பார் கிம். ஆனால் சமீபத்திய அவரது புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியம் கொள்ள வைத்துள்ளது. அவரது பருத்த முகம் பெருமளவில் மெலிந்துபோய் உள்ளது. அவரது உடல் எடையை அதிகளவில் குறைத்துள்ளார். கிட்டத்தட்ட 10 முதல் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.அவரது மெலிந்த உடலைப் பார்த்து அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். கிம்முக்கு உடல்நிலை பிரச்னை காரணமாக உடல் எடை குறைந்ததா என கவலை தெரிவித்துள்ளனர். கிம் உடல்நிலை குறித்து கவலையடைய சில காரணங்களும் உள்ளன. புகையும், மதுவும் கிம்முக்கு வழக்கமான ஒன்றுதான். கிம்மின் தந்தையும், தாத்தாவுமே இதய நோயால் பாதிக்கப்பட்டே உயிரிழந்தார்கள். இந்த வம்சாவளி சிக்கலில் கிம் சிக்கி இருப்பாரா என்பதே அவரது ரசிகர்களின் கவலையாக இருந்தது.ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சியோலின் கொரியா இன்ஸ்டிடியூட் ஃபார் நேஷனல் யூனிஃபிகேஷனின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின், உடல் எடையை கிம் ஆரோக்கியத்தை கணக்கிட்டே குறைத்திருப்பார். மற்றப்படி அவருக்கு உடல் பிரச்சனைகள் இருக்க வாய்ப்பில்லை. அப்படி உடல் பிரச்னை என்றால் தொழிலாளர் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு அவர் வந்திருக்கவே மாட்டார் என்றார்