வாழ்க்கையின் இறுதி கட்டம்.. கடைசி நொடிகளை எண்ணி கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழர்...நாளை நிறைவேற்றப்பட உள்ள மரண தண்டனை..!
மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மனித உரிமை அமைப்புகள், மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சிங்கப்பூர் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தது.
சிங்கப்பூருக்கு போதைப் பொருளை கடத்தி சென்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 46 வயது தமிழருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மனித உரிமை அமைப்புகள், மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சிங்கப்பூர் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்த வந்தது.
கடைசி நொடிகளை எண்ணி கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழர்:
ஆனால், அனைத்து விதமான கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளது சிங்கப்பூர் அரசு. இந்த சூழலில், வாழ்க்கையின் கடைசி நொடிகளை எண்ணி கொண்டிருக்கிறார் சிங்கப்பூர் தமிழரான தங்கராஜூ சுப்பையா.
சிங்கப்பூருக்கு போதை பொருள் கடத்தி செல்ல முயற்சி செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு, அக்டோபர் 9ஆம் தேதி, தங்கராஜூ சுப்பையாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு போதைப்பொருள் உட்கொண்டமைக்காகவும், போதைப்பொருள் பரிசோதனைக்கு ஆஜராகாத காரணத்தாலும் அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, தங்கராஜூ சுப்பையாவுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, பிரிட்டன் நாட்டின் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன், சுப்பையாவுக்கு ஆதரவாக வலைப்பதிவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தங்கராஜூ சுப்பையா ஏன் இறக்கக் கூடாது என்ற தலைப்பில் பிரான்சன் எழுதிய கட்டுரையில், "சுப்பையாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சர்வதேச விதிகளை பூர்த்தி செய்யவில்லை. சிங்கப்பூர் ஒரு அப்பாவியை கொல்லப் போகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழருக்காக குரல் கொடுக்கும் உலக நாடுகள்:
ரிச்சர்ட் பிரான்சன் மட்டும் இன்றி, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலிய எம்பி கிரகாம் பெரெட் உள்ளிட்ட பலர், தங்கராஜூ சுப்பையாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தங்கராஜூ சுப்பையாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து, சிங்கப்பூரில் உள்ள நார்வே, சுவிட்சர்லாந்து தூதரகங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. தண்டனை குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலிய எம்பி கிரகாம் பெரெட் தனது பேஸ்புக் பதிவில், "சுப்பையாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சர்வதேச சட்ட விதிகளை மீறும் வகையில் உள்ளது. இது கவலை அளிக்கும் விதமாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
ரிச்சர்ட் பிரான்சனின் வலைப்பதிவு கட்டுரைக்கு சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. "சிங்கப்பூரர் நாட்டை சேர்ந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பிரான்சனின் கருத்துக்கள் நாட்டின் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்புக்கு அவமரியாதை அளிக்கும் விதமாக உள்ளது.
வழக்கில் தொடர்புடைய மற்ற இருவருடன் தொடர்பு கொண்ட நபர் தான் இல்லை என்பது தங்கராஜூ தரப்பு வாதமாகும். இருப்பினும், உயர் நீதிமன்றம் தங்கராஜூவின் சாட்சியங்களை நம்பமுடியாததாகக் கண்டறிந்தது. மேலும் அவர் மற்ற இருவருடனும் தொடர்பு கொண்டதாகவும், மற்ற இருவர் மூலம் கஞ்சா வாங்கியதும், அதற்கான ரசீது வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது" என சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.