100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொளுத்தி எடுத்த வெயில்... சுட்டெரிக்கும் மே மாதம்...காரணம் என்ன?
இந்த மாதம், வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்ப அலைகள் காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தீவிரமான வானிலை உலகம் முழுவதும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி இயல்பை விட அதிகமாக பதிவாவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக, தீவிர வானிலை ஏற்படுவதற்கு உலக வெப்பமயமாதல் முக்கிய காரணமாக உள்ளது.
மக்களை வாட்டி வதைக்கும் வெயில்:
வளரும் நாடுகளும் பின்தங்கிய நாடுகளும் மட்டும் இன்றி, வளர்ந்த நாடுகளும் இதனால் பாதிப்படைந்துள்ளன. கோடை காலம் என்பதால், வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, இந்த மாதம், வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்ப அலைகள் காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் வெப்பம் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. பிற்பகலுக்குப் பிறகு, மத்திய ஷாங்காயில் உள்ள மெட்ரோ நிலையத்தில் வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது.
இதுகுறித்து நகரின் வானிலை மையம் வெளியிட்ட தகவலில், "மதியம் 1:09 மணிக்கு, சுஜியாஹுய் நிலையத்தில் வெப்பநிலை 36.1 டிகிரி செல்சியஸை (97 டிகிரி பாரன்ஹீட்) எட்டியது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதல்:
கடைசியாக பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ் ஆகும். கடந்த 1876, 1903, 1915, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்த வெப்பநிலை பதிவாகியிருந்தது.
உலக வெப்பமயமாதல், தீவிர வானிலையை மேலும் மோசமாக்கியுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். காலநிலை மாற்றம் தொடர்பாக ஐநா குழு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "புவி வெப்பமடைதல், ஒரே நேரத்தில் பல்வேறு விதமான ஆபத்துகளை மேலும் தீவிரப்படுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை இல்ல வாயுக்களும், எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதால், 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டு காலம் வெப்பமான காலகட்டமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை இந்த மாதம் எச்சரித்திருந்தது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "பருவநிலை மாற்றம் தொடர்பாக பாரிஸ் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திலாவது அதிக உலக வெப்பம் பதிவாகும் என்பதற்கு மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்பு இருக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதும் கடந்த 34 ஆண்டுகளில் நீர்நிலைகளில் நீர் ஆவியாதலின் சதவிகிதம் 58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நீர்நிலைகளில் நீர் ஆவியாதல் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.