வெளிநாட்டுக்கு சென்றால் பிரச்னை.. நெருக்கடியில் புதின்.. உச்சக்கட்ட பதற்றத்தில் ரஷியா.. குமுறும் உயர்மட்ட அதிகாரிகள்..!
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவால் மூத்த ரஷிய அதிகாரிகள் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. தி மாஸ்கோ டைம்ஸ்-க்கு இது தொடர்பாக ரஷியா அரசின் இந்நாள், முன்னாள் அரசு ஊழியர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சர்வதேச நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி காட்டியிருந்தது. உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளை சட்ட விரோதமாக தங்கள் நாட்டுக்கு குடிபெயர்ந்து அழைத்து சென்றது ரஷியா.
நெருக்கடியில் புதின்:
இந்த போர் குற்றத்திற்கு புதினே பொறுப்பு என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவால் மூத்த ரஷிய அதிகாரிகள் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி மாஸ்கோ டைம்ஸ் செய்தித்தாளுக்கு இது தொடர்பாக ரஷியா அரசின் இந்நாள், முன்னாள் அரசு ஊழியர்கள் பேட்டி அளித்துள்ளனர். சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்பது குறித்து ஆலோசிக்க ரஷியா அரசால் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது என ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ரஷியா கடுமையாக சாடிய போதிலும், திரைக்குப் பின்னால், சாத்தியமான அரசியல் பாதிப்புகள் குறித்து அந்நாடு கவலை தெரிவித்துள்ளது.
ரஷியாவில் ஆளும் கட்சியை சேர்ந்த துணை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "இது அடிப்படையில் ரஷியாவில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான அழைப்பு" என்றார்.
குமுறும் உயர் மட்ட அதிகாரிகள்:
தி மாஸ்கோ டைம்ஸ், இது தொடர்பாக ஏழு அதிகாரிகளிடம் பேசியுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவால் ஏற்படும் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தே அனைத்து அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர். உலக அரங்கில் புதின் எப்படி காட்டப்படுவார், வெளிநாடுகளுக்கு எப்படி செல்வார் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ரஷியாவில் உச்சபட்ச அதிகாரத்தை புதின் அனுபவித்து வருகிறார். எனவே, புதினை சர்வதேச நீதிமன்றத்திடம் ரஷியாவால் ஒப்படைக்க முடியாது. ரஷியாவில் இருக்கும் வரை, புதினை கைது செய்ய முடியாது. இருப்பினும், புதின் ரஷியாவை விட்டு வெளியேறினால் அவர் தடுத்து வைக்கப்படலாம்.
எனவே, அவர் பயணம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், உக்ரைன் போர் தொடர்பாக அவருக்கு எதிரான சர்வதேச தடைகள் காரணமாக, அவரை விசாரணைக்கு உட்படுத்த விரும்பும் நாட்டுக்கு செல்ல முடியாது.
இதேபோன்ற குற்றச்சாட்டின் பேரில் ரஷியாவில் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவை கைது செய்யவும் கடந்த மாதம் சர்வதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.
தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஹோஃப்மான்ஸ்க், "சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வாரண்டுகளை பிறப்பித்துள்ள நிலையில், அவற்றை அமல்படுத்துவது சர்வதேச சமூகத்தின் கையில் இருக்கிறது. வாரண்டுகளை அமல்படுத்த நீதிமன்றத்திற்கு சொந்தமாக போலீஸ் படை இல்லை.
சர்வதேச நீதிமன்றம், ஒரு நீதிமன்றமாக தனது பணியை செய்து வருகிறது. நீதிபதிகள் கைது வாரண்ட் பிறப்பித்தனர். ஆனால், அதை நிறைவேற்றுவது சர்வதேச ஒத்துழைப்பைப் சார்ந்து உள்ளது" என்றார்.