Prince Harry Royal Life: ’அது பேலஸ் இல்ல.. விலங்குகள் பூங்கா!’ – கொட்டித்தீர்த்த இளவரசர் ஹாரி..
மேகனும் நானும் முதன்முதலில் சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்தோம். என்னை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக பேஸ்பால் தொப்பி அணிந்திருந்தேன்.எனக்கு பின்னால் எதிர்ப்பக்கம் பார்த்தபடி மேகன் நின்று கொண்டிருந்தார்.
பிரிட்டன் அரண்மனையிலிருந்து வெளியேறிய பிறகு நடிகை மேகன் மார்க்கல் மற்றும் இளவரசர் ஹாரி இணையர் தொடர்ச்சியாகப் பல மீடியாக்களுக்குப் பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் மேகன் மார்க்கல் நெறியாளர் ஓபரா வின்ஃப்ரேவுக்கு அளித்த பேட்டி பரபரப்பானது. அதன் வரிசையில் அமெரிக்க நடிகர் டேக்ஸ் ஷெப்பர்ட் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்திருக்கும் இளவரசர் ஹாரி தனது பல பெர்சனல் பக்கங்களைப் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக அரண்மனை வாழ்க்கை விலங்குகள் பூங்காவில் வாழ்வதுபோல இருந்தது என்னும் அவரது கருத்து பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தனது மனைவி மேகனுடனான முதல் டேட்டிங் அனுபவம், தான் திருமணம் செய்துகொள்ள எடுத்த முடிவு என சுவாரசியத்துக்குக் குறைவில்லாமல் பல தகவல்களைக் கொட்டித்தீர்த்திருக்கிறார் ஹாரி.
முதல் டேட்டிங்
மேகனுடனான முதல் சந்திப்பைப் பகிர்ந்த ஹாரி,’மேகனும் நானும் முதன்முதலில் சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்தோம். என்னை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக பேஸ்பால் தொப்பி அணிந்திருந்தேன்.எனக்கு பின்னால் எதிர்ப்பக்கம் பார்த்தபடி மேகன் நின்று கொண்டிருந்தார். பக்கத்திலேயே இருந்தாலும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல மொபைலில் எங்களுக்குள்ளேயே மெசேஜ் செய்துகொண்டிருந்தோம்’ என்கிறார்.
பிடிக்காத வேலை
அரண்மனையை தனது இருபது வயதிலிருந்தே வெறுத்ததாகச் சொல்கிறார் ஹாரி. “அரண்மனை வாழ்க்கை பிடிக்காத வேலையைச்செய்வது மாதிரி. பிடிக்கவில்லையென்றாலும் வெளியே சிரித்தபடிதான் வாழவேண்டும். நான் அந்த விலங்குகள் பூங்காவிலிருந்து வெளியேற விரும்பினேன். அங்கே விலங்குகளுடனான வாழ்க்கை என் அம்மாவை என்ன செய்தது என்று எனக்குத் தெரியும். அவருக்கு நடந்தது போல மீண்டும் நடக்கும் என்னும்போது அங்கே எனக்கான குடும்பத்தை எப்படி உருவாக்கிக் கொள்ளமுடியும்?அங்கே திரைக்குப் பின்னால் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். அங்கே நடக்கும் வியாபாரங்களைப் பார்த்திருக்கிறேன். அதற்கு என்னால் துணைபோக முடியாது.
பின்னர் ஒருநாள் மேகன் தான் என்னை ஒரு தெரபிஸ்ட்டைப் பார்க்கச் சொன்னார். அது என்னுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றியது. மூச்சுவிடமுடியாமல் மணலுக்குள் தலைசிக்கிக்கொண்டவன் எப்படியோ மீண்டு வந்தேன். என்ன செய்யவேண்டும் என்பது தெரிந்தது. என்னிடம் எல்லாம் இருக்கிறது எதுவுமே இல்லை எனக் குறைபட்டுக்கொள்வதை நான் நிறுத்தவேண்டும் என்பதை புரிந்துகொண்டென். என்னிடம் இருப்பதை வைத்து எதை மாற்றமுடியும்? என் அம்மாவை எப்படிப் பெருமைப்படுத்த முடியும்? என்பதை யோசித்தேன்’ என்கிறார்.
’அப்பாவுடனான உறவுச்சிக்கல்!’
தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையிலான உறவுச்சிக்கலும், அது தன்னை பாதித்த விதம் குறித்துப் பகிரும் அவர், “எனக்கு அப்பா மீது கோபம் இருந்தது. அப்பா அம்மாவின் உறவில் இருந்த விரிசல் பிள்ளைகள் எங்களை பாதித்தது. ஆனால் அது என்னோடு போகட்டும் எனக்கு நடந்தது என் பிள்ளைகளுக்கு நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார். இளவரசர் ஹாரி தற்போது பிரபல அமெரிக்க விளையாட்டுப் பயிற்சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.