பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருது..!
பிரதமர் மோடிக்கு 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருதை எகிப்து நாட்டின் அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி இன்று வழங்கினார்.
பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. கெய்ரோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருதை பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி வழங்கினார்.
ஆர்டர் ஆஃப் தி நைல் விருது:
'ஆர்டர் ஆஃப் தி நைல்' என்பது மூன்று சதுர தங்க அலகுகளை கொண்ட தங்க பதக்கம் ஆகும். அதில், பாரோனிக் சின்னங்கள் பொறிக்கப்பட்டன. முதல் அலகு தீமைகளுக்கு எதிராக அரசைப் பாதுகாப்பதை குறிக்கிறது. இரண்டாவது நைல் நதியால் கொண்டுவரப்பட்ட செழிப்பையும் மகிழ்ச்சியையும் குறிக்கிறது. மூன்றாவது ஒன்று செல்வத்தையும் சகிப்புத்தன்மையையும் குறிக்கிறது. நீல பச்சை வண்ணம் கொண்ட ரத்தின கல் மற்றும் மாணிக்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வட்ட வடிவ தங்கப் பூவால் அலகுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதிக்கு சென்ற பிரதமர்:
முன்னதாக, எகிப்து நாட்டில் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹகிம் மசூதிக்கும் கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறைக்கும் பிரதமர் மோடி இன்று சென்றார். தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இமாம் அல்-ஹக்கிம் பி அம்ர் அல்லா மசூதியில், மசூதியின் சுவர்கள் மற்றும் கதவுகளில் உள்ள அழகிய கல்வெட்டுகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
13,560 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட மசூதி, இந்தியாவை சேர்ந்த தாவூதி போஹ்ரா சமூக மக்களின் உதவியுடன் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. தாவூதி போஹ்ரா இஸ்லாமியர்கள், பாத்திமிட் ஆட்சி காலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் 1970 ஆம் ஆண்டு முதல் பள்ளிவாசலைப் புதுப்பித்து, அன்றிலிருந்து இன்றுவரை அதனை பராமரித்து வருகின்றனர்.
முதல் உலகப் போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி:
இதுகுறித்து எகிப்து நாட்டுக்கான இந்திய தூதர் அஜித் குப்தே கூறுகையில், "குஜராத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் போஹ்ரா சமூகத்தினருடன் பிரதமருக்கு மிக நெருக்கமான தொடர்பு உள்ளது" என்றார்.
பின்னர், ஹெலியோபோலிஸ் போர் கல்லறையில், முதல் உலகப் போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். முதல் உலகப் போரில் எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் போரிட்டு உயிரிழந்த சுமார் 4,000 இந்திய ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்த எகிப்து அதிபருடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 26 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் எகிப்துக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும்.
ஜி-20 உச்சி மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக எகிப்து அழைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார் அந்நாட்டின் அதிபர் அப்துல் ஃபத்தா.