PM Modi Speech : வரலாற்று நிகழ்வு..அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் இந்திய பிரதமர்..!
வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்கா செல்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் இந்திய பிரதமர்:
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகள் - பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டும், கட்சி சார்பற்று, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்ற உள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.
மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இரு நாடுகளுக்கிடையேயான உறவில் அந்த உரை முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இரு நாட்டின் ஆழமான நெருக்கமான உறவை மீண்டும் உறுதி செய்யும் நிகழ்வாக மோடியின் உரை அமையும் என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, கூட்டு நாடாளுமன்ற அமர்வில் உரையாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மோடியின் பயணம் இந்திய அமெரிக்க உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லுமா?
மோடி அனுப்பிய பதில் கடிதத்தில், "ஜனநாயக விழுமியங்கள், இரு நாட்டு மக்களிடையே உள்ள நெருக்கமான உறவுகள், உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவுடன் உலகளாவிய வியூக ரீதியான கூட்டணி கொள்வதில் பெருமை" என குறிப்பிட்டுள்ளார்.
இந்தோ - பசிபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் மூத்த அதிகாரி கர்ட் காம்ப்பெல் இதுகுறித்து கூறுகையில், "இந்தியாவுடனான உறவை உலகிலேயே அமெரிக்காவிற்கு மிக முக்கியமானதாக மாற்ற இந்தப் பயணம் உதவக்கூடும். உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்தவும் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காகவும் பல வணிக மற்றும் முதலீட்டு குழுக்கள் இந்தியாவை எதிர்நோக்கி வருகின்றன" என்றார்.
அமெரிக்க வாழ் இந்திய மக்கள், பிரதமர் மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் ஜூன் 18ஆம் தேதி அமெரிக்காவின் 20 வெவ்வேறு நகரங்களில் ‘இந்திய ஒருமைப்பாட்டு அணிவகுப்பு’ நடத்தப்பட உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை சிறப்பித்துக் காட்டும் வகையில், ஜூன் 21ஆம் தேதி வெள்ளை மாளிகையின் முன் மாபெரும் கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.