Lahore Blast: லாகூரில் அடுத்தடுத்து கேட்ட வெடிச் சத்தம்.. என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் பீதி...
பாகிஸ்தானின் லாகூரில் அடுத்தடுத்து மர்ம வெடிச் சத்தம் கேட்டதால், என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், இன்று லாகூரில் திடீரென பல இடங்களில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த மாதம் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 26 பேர் கொல்லப்பட்டனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெஸிஸ்டண்ட் ஃபிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டிய நிலையில், பாகிஸ்தான் அரசு வேறு வழியின்றி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகளை தாக்கி அழிக்க இந்தியா முடிவெடுத்தது.
இதைத் தொடர்ந்து, பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப்பின், ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை நேற்று அதிகாலை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
லாகூரில் கேட்ட வெடிச் சத்தத்தால் மக்கள் பீதி
இப்படிப்பட்ட சூழலில், இன்று பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூரில் பல இடங்களில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்திற்கான காரணம் தெரியாத நிலையில், மக்கள் பீதியடைந்துள்ளனர். இதேபோல, வால்டன் விமான நிலையம் அருகிலும் சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தியா நடத்தும் தாக்குதலா என்பது தெரியாமல் பாதுகாப்புத் துறையினர் குழம்பிப் போய் உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவ பகுதிகளில் இந்தியா தாக்குதல் ஏதும் நடத்தாத நிலையில், எல்லை அருகே உள்ள பாரமுல்லா, பூஞ்ச், ரசோரி உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதில், ராணுவ வீரர் உட்பட 16 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் எந்நேரமும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது உளவுத்துறை. மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதை சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.




















