மக்கள் பிரச்னைகளுக்கு ஜனநாயகத்தில் தீர்வு இல்லை: தலிபான் கமாண்டர்
மக்கள் பிரச்னைகளுக்கு ஷரியா சட்டத்தில் தான் தீர்வு இருக்கிறது. ஜனநாயகத்தில் இல்லை என்று தலிபான் கமாண்டர் வஹிதுல்லா ஹாஸ்மி தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரச்னைகளுக்கு ஷரியா சட்டத்தில் தான் தீர்வு இருக்கிறது. ஜனநாயகத்தில் இல்லை என்று தலிபான் கமாண்டர் வஹிதுல்லா ஹாஸ்மி தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக தமிழ் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியிருக்கிறார். காணொளி வாயிலாக அவர் அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
தலிபான்கள் எப்போதும் துப்பாக்கியுடன் இருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாதா என்ற கேள்வியைக் கேட்கிறீர்கள். இதே கேள்வியை நீங்கள் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினரைப் பார்த்து எழுப்புவீர்களா? ஆப்கன் அவசரநிலையில் உள்ளது. இப்போதுதான் நாங்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளோம். மக்கள் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். மக்களும் இப்போது தான் பாதுகாப்பாக உணர்கிறார்கள்
20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கனைக் கைப்பற்றியிருக்கிறோம். இந்த 20 ஆண்டுகளில் நாங்கள் ஆப்கன் மக்களுடன் தான் இருந்தோம். அமெரிக்கப் படைகளுக்கு எதிரான எங்களின் போரில் மக்கள் எங்களையே ஆதரித்தனர். நாங்கள் அமெரிக்காவை வென்றதும் மக்கள் எங்களைக் கொண்டாடினார்கள். காபூல் நகர மக்கள் எங்களின் கைகளில் முத்தமிட்டுவரவேற்றனர். ஆப்கனைவிட்டு வெளியேறியவர்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களே இல்லை. அவ்வாறாக வெளியேறியவர்கள் இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர்கள். ஊழல்வாதிகள், திருடர்கள். அவர்களின் ஊழல்களுக்கு எதிராக நாங்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனாலேயே அவர்கள் வெளியேறினார்கள்.
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்தை நிலைநாட்டவே 40 ஆண்டுகளாகப் போராடியுள்ளோம் . மக்கள் பிரச்னைகளுக்கு ஜனநாயகத்தில் தீர்வு கிடைக்காது. அதனாலேயே நாங்கள் இஸ்லாமிய சட்டத்தின்படி ஆட்சி நடத்துவோம் என்று அறிவித்துள்ளோம். இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தானில் எல்லாமே ஷரியா சட்டத்தின் படி தான் நடைபெறும். பெண்கள் மீது சமூக பொறுப்பை சுமையாக ஏற்ற நாங்கள் விரும்பவில்லை. இஸ்லாமியச் சட்டம் அதை அனுமதிப்பதில்லை. அதனாலேயே நாங்கள் இஸ்லாமியச் சட்டத்தின் படி பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இடம் தரவில்லை.
மற்றபடி எங்கள் வாழ்வில் இருக்கும் தாய், மனைவி, சகோதரி, மகள் என அத்தனைப் பெண்களையும் நாங்கள் மதிக்கிறோம். ஒரு பெண் தன்னுடைய தந்தை, கணவர், சகோதரனுடன் மட்டுமே நெருங்கிப் பழக் முடியும் அதனால் தான் பள்ளி, கல்லூரிகளில் இருபாலர் வகுப்பை நாங்கள் எதிர்க்கிறோம். தனக்கு உறவல்லாத மூன்றாம் ஆணுடன் ஒரு பெண் பழகுவதை இஸ்லாம் ஏற்காது. நாங்கள் பெண்களை மதிக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போல் பெண்களை வெறும் பொம்மைகளாக நாங்கள் வைத்திருக்கவில்லை.
இந்தியாவில் நடப்பது போன்ற பாலியல் குற்றங்கள் ஷாரியா சட்டம் அமலில் உள்ள ஆப்கனில் நடக்க வாய்ப்பில்லை. எங்களின் மத நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்க முடியாது.
உலக நாடுகளுடன் நாங்கள் நல்ல உறவைப் பேணவே விரும்புகிறோம். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எங்களை வரவேற்கின்றன. ஈரான், ஜெர்மனி, அரபு நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள் எங்களிடம் நட்பு பாராட்ட விரும்புகின்றன. ஆப்கன் நிலப்பரப்பு ஒருபோதும் எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக பயன்படுத்தப்பட விடமாட்டோம். எங்களை யாரும் எதிரியாகப் பார்க்காத வரை நாங்கள் யாருக்கும் எதிரியில்லை. பாகிஸ்தானுடன் நாங்கள் நட்புறவுடன் இருப்பதால் அது இந்தியாவுக்கு எதிரானது என இந்தியா கருதக்கூடாது.
தலிபான்களுக்குள் எந்த கருத்த வேறுபாடும் இல்லை. அந்த வதந்தியில் எந்த விதமான உண்மையும் இல்லை. எங்கள் தலைமையின் உத்தரவுகளின்படி நாங்கள் நடக்கிறோம்.