N.Korea Nuclear Submarine: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில், வட கொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமான நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2021- ஆம் ஆண்டு, ஒரு பெரிய அரசியல் மாநாட்டின் போது, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்த அதிநவீன ஆயுதங்களின் நீண்ட விருப்பப் பட்டியலில், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலும் ஒன்று. இந்நிலையில், அந்த கப்பலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், அது முடியும் தருவாயில் உள்ளதையும் காட்டும் விதமாக புகைப்படம் வெளியாகியுள்ளது.
வட கொரிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் குறித்து வெளியான புகைப்படங்கள்
கடந்த வியாழக்கிழமை அன்று, வட கொரியா, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானத்தில் வெளிப்படையான முன்னேற்றத்தைக் காட்டியது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், போட்டியாளரான தென் கொரியாவின் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான முயற்சியை கண்டித்த நிலையில், கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் மேலோட்டத்தைக் காட்டும் அரசு ஊடக புகைப்படங்கள் வெளியாகின.
வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம், 8,700 டன் ரக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானத்தை ஆய்வு செய்ய, அதிபர் கிம் ஒரு கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்றதாகக் கூறியது. இது வட கொரியாவின் கடற்படையின் நவீனமயமாக்கல் மற்றும் அணு ஆயுதத் தயாரிப்பில் ஒரு முக்கியமான படியாகும் என்று அதிபர் கிம் கூறியுள்ளார். நீர்மூழ்கிக் கப்பலை அணு ஆயுதங்களுடன் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக வட கொரியா சுட்டிக்காட்டியுள்ளது. இது "மூலோபாய வழிகாட்டப்பட்ட ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்" அல்லது "மூலோபாய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்" என்று அழைக்கப்படுகிறது.
கிம் ஜாங் உன் கூறியது என்ன.?
இந்த கப்பலை பார்வையிட வந்தபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவுடன், தென் கொரியா தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை வாங்குவதற்காக எடுத்துவரும் முயற்சிகளை, வடகொரியாவின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் இறையாண்மையை கடுமையாக மீறும் ஒரு "தாக்குதல் செயல்" என்று கிம் ஜாங் உன் கூறிஹியுள்ளார்.
மேலும், தென் கொரியத் திட்டம், வட கொரியாவின் கடற்படையை முன்னேற்றுவதற்கும் அணு ஆயுதங்களை வழங்குவதற்கும் உள்ள அவசியத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் கூறினார். அதோடு, தனது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை நிறைவு செய்வது, எதிரி அச்சுறுத்தல்கள் என்று அவர் அழைத்ததற்கு எதிராக, அதன் அணுசக்தி போர் தடுப்பை வலுப்படுத்துவதில் ஒரு "சகாப்தத்தை உருவாக்கும்" மாற்றமாக இருக்கும் என்றும் கிம் கூறியுள்ளார்.
தென் கொரியா கூறுவது என்ன.?
இந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரியா, "இப்போது முழு கப்பலையும் காண்பிப்பது, பெரும்பாலான உபகரணங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டதையும், அது தண்ணீரில் செலுத்தத் தயாராக இருப்பதையும் குறிக்கிறது" என்று தென் கொரிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் முன்னாள் அதிகாரி மூன் கூறினார். மேலும், வட கொரிய அந்த நீர்மூழ்கிக் கப்பலை சில மாதங்களுக்குள் கடலில் சோதிக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு, ஒரு பெரிய அரசியல் மாநாட்டின் போது வட கொரிய அதிபர் கிம் அறிவித்த, அமெரிக்கா தலைமையிலான வளர்ந்து வரும் ராணுவ அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, அதிநவீன ஆயுதங்களின் நீண்ட விருப்பப் பட்டியலில், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலும் ஒன்று. மற்ற ஆயுதங்களில், திட எரிபொருள் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள், உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் பல போர்முனை ஏவுகணைகள் ஆகியவை அடங்கும்.
அமெரிக்கா, தென் கொரியாவிற்கு மறைமுக எச்சரிக்கை
வடகொரியா, ரகசியமாக இயங்கக்கூடிய மற்றும் நீருக்கடியில் இருந்து ஏவுகணைகளை ஏவக்கூடிய ஒரு நீர்மூழ்கிக் கப்பலைப் பெற்றால், அது அதன் அண்டை நாடுகளுக்கு கவலையளிக்கும் ஒரு முன்னேற்றமாக இருக்கும். ஏனெனில், அத்தகைய ஏவுகணைகளை முன்கூட்டியே கண்டறிவது கடினம்.
ஏற்கனவே, தனது எதிரி நாடான தென் கொரியா, அமெரிக்கா உடன் இணைந்து நடத்தும் போர் பயிற்சிகள் குறித்து வட கொரிய அதிபர் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த நீர்மூழ்கிக் கப்பலின் படங்களை வெளியிட்டது, அவ்விரு நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.





















