மளமளவென சரிந்த 3 அடுக்கு மாடி கட்டடம்.. இடிபாடுகளில் பலர் சிக்கி தவிப்பு... 6 பேர் மீட்பு
நைஜீரியா நாட்டில் அடுக்குமாடி கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
நைஜீரியாவின் கனோ பகுதியின் பெய்ரூத் சாலை பகுதியில் 3 அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டுப்பட்டு வந்துள்ளது. இந்தக் கட்டடம் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வந்துள்ளது. இந்தச் சூழலில் இன்று திடீரென்று அந்தக் கட்டடம் பாதியில் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இடிபாடுகளில் பல்வேறு மக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BREAKING: Scores trapped as two-storey building collapse at Beirut Road Mobile Phones Market in Kano. pic.twitter.com/hX5FBT7nng
— Ibrahim Ayyuba Isah, ANIPR (@ibrahimisahTVC) August 30, 2022
இந்த விபத்து தொடர்பாக மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. ஏற்கெனவே கடந்த வாரம் நைஜீரியா நாட்டின் அபுஜா பகுதியில் இருந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 5 பேர் படு காயம் அடைந்தனர். அந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விபத்து நடைபெற்று ஒரு வாரத்திற்குள் தற்போது நைஜீரியாவில் மேலும் ஒரு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. ஒரு வாரத்திற்குள் இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை விரைவில் அரசு மீட்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க:கையிலே சாகசம்... நிமிடத்தில் பேஸ்பால் பேட்களை தெறிக்கவிட்டு கின்னஸ் சாதனை.. வைரல் வீடியோ