‛தோழியுடன் ரொமெண்டிக் சுற்றுலா வந்த மெகுல் சோக்சி’; ஆன்டிகுவா பிரதமர் அதிர்ச்சி தகவல்!
பஞ்சாப் வங்கியில் பண மோசடி செய்து தலைமறைவான மெகுல் சோக்சி தன்னுடைய பெண் தோழியுடன் ரொமெண்டிக் சுற்றுலா சென்றதாக ஆன்டிகுவா பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ஆகிய இருவரும் மும்பை நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடனைப்பெற்று, பிறகு பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ, இந்நிலையில் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பியோடினர். அதில் மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டிலிருந்து படகு மூலம் தீவு நாடான டொமினிகாவிற்கு தப்பி சென்றுள்ளார். அந்த சமயத்தில் காவல்துறையினர் அவரை பிடித்துள்ளனர். அதன்பின்னர் அவர் கண் சிவந்து இருப்பது போன்றும், கையில் இரத்த காயங்களுடன் இருக்கும் நிழற்படங்களும் வெளியானது. இதுகுறித்து டொமினிக்கா அரசு வெளியிட்ட பதிவில் 'டொமினிகாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக மெகுல் சோக்சி தடுத்து வைக்கப்பட்டார். இவர் மீது இன்டர்போல் நிறுவனமும் ரெட் அலர்ட் வழங்கியுள்ளது. ஆன்டிகுவாவின் அதிகாரிகளுடன் டொமினிகா தொடர்புகொண்டுள்ளது. அவரை ஆன்டிகுவாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தச் சூழலில் ஆன்டிகுவா நாட்டின் பிரதமர் கஸ்டன் ப்ரொவுன் மெகுல் சோக்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மெகுல் சோக்சி ஒரு மிகப் பெரிய தவறை செய்துள்ளார். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவர் தன்னுடைய பெண் தோழியுடன் டொமினிகா நாட்டிற்கு தப்பி செல்ல முயன்றுள்ளார். தற்போது அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிபிஐ மற்றும் அமலாக்கதுறை விசாரணைக்கு ஆஜராகுமாறு மெகுல் சோக்சிக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். எனினும் அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் ஆன்டிகுவாவில் இருப்பது தெரிந்த உடன் அவரை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. எனினும் ஆன்டிகுவா நாட்டு உடன் உரிய ஒப்பந்தம் எட்டப்படாததால் அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்தது. இந்தச் சூழலில் அவர் ஆன்டிகுவா நாட்டிலிருந்து தப்பி டொமினிகா சென்று அங்கிருந்து கியூபா செல்ல திட்டமிட்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
Mehul Choksi detained for illegal entry into Dominica. Red alert has also been issued by Interpol. Dominica in touch with authorities of Antigua, possible arrangements will be made for him to be repatriated to Antigua: Ministry of National Security & Home Affairs of Dominica pic.twitter.com/qXvc0vthwm
— ANI (@ANI) May 27, 2021
ஆன்டிகுவா பிரதமரும் தற்போது மெகுல் சோக்சியை இந்தியாவிற்கு அனுப்பலாம் என்று கூறியிருப்பதால் அவரை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதேசமயம் மற்றொரு தொழிலதிபர் நீரவ் மோடி தற்போது பிரிட்டனில் உள்ளார். அங்கு அவர் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து சிறையில் இருந்து வாதாடி வருகிறார். ஆகவே விரைவில் நீரவ் மோடியையும் நாட்டிற்கு கொண்டு வந்து விசாரிக்க இந்திய அரசு முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Boris Johnson | எளிமையான திருமண நிகழ்வில் காதலியை மணந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்