World Hepatitis Day | உலக ஹெபடைட்டிஸ் தினம் : விழிப்புணர்வு உள்ளதா? கல்லீரல் அழற்சி நோய் யாரை பாதிக்கும்?
கல்லீரலில் செயல்பாடுகள் பாதிக்கப்படும் வரை இந்நோயின் அறிகுறிகள் நமக்குத் தென்படாது.
ஹெபடைட்டிஸ் என்ற சொல்லுக்கு கல்லீரலின் வீக்கம் என்று பொருள். வைரஸ்கள் உள்ளிட்ட பிற தொற்றுகள், ஆல்கஹால் மற்றும் பிற இரசாயனங்கள் காரணமாக ஒருவருக்கு ஹெபடைட்டிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது. இவை நோயின் தாக்கத்தினைப்பொறுத்து ஏ, பி, சி, டி மற்றும் ஈ என 5 வகைப்படுத்தப்படுகிறது.
ஹெபடைடிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி நோய் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28-ஆம் தேதி உலக ஹெபடைட்டிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டு பொது சுகாதார அச்சுறுத்தலாக கல்லீரல் அழற்சி நோய் ஏற்படாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வினை மக்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. உலகளவில் 71 மில்லியன் மக்களுக்கு ஹெபடைட்டிஸ் சி தொற்று இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டில் ஹெபடைட்டிஸ் சி நோயினால் பாதிக்கப்பட்டு சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நோய் பலருக்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறது எனக்கூறப்படும் நிலையில், முதலில் இந்நோய் எப்படி ஏற்படுகிறது? என்ன பாதிப்பு என அறிந்துக்கொள்வோம். பொதுவாக கல்லீரலில் செயல்பாடுகள் பாதிக்கப்படும் வரை இந்நோயின் அறிகுறிகள் நமக்கு தென்படாது. குறிப்பாக கடுமையான ஹெபடைட்டிஸ் ஆரம்பத்தில் சோர்வு, குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் போன்ற நோயால் வகைப்படுத்தப்படுகிறது. சில வாரங்களுக்குப் பிறகு, மஞ்சள் காமாலை, அடர் நிற சிறுநீர் மற்றும் வயிற்று வலி மற்றும் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த நேரத்தில் கல்லீரல் செயல்பாடு சோதனைகள் (LFT’s) அசாதாரணமாக இருக்கும் மற்றும் இரத்த பரிசோதனைகள் வைரஸ் தொற்றுநோயை அடையாளம் காண்கிறது.
குறிப்பாக ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ ஆகியவை அசுத்தமான உணவு மற்றும் நீரால் பரவுகின்றன, அதே நேரத்தில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ்கள் பாதிக்கப்பட்ட இரத்தத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகின்றன. ஹெபடைட்டிஸ் பி, கூடுதலாக, பாலியல் ரீதியாகவும் அல்லது தாயிடமிருந்து தனது குழந்தைக்கு அனுப்பப்படலாம். ஈ கடுமையானது எனவும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தானது எனவும் உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. ஆனால் இந்நோயினை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்றாலும், தொடர்ச்சியான மருந்துகள் உட்கொள்வதினால் இந்நோயிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் நோய் தாக்காமல் இருப்பதற்கு பிறந்தவுடன் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அமெரிக்காவில் சுமார் 1.2 மில்லியன் மக்களுக்கு நாள்பட்ட ஹெபடைட்டிஸ் பி உள்ளது. இவற்றில், 15% முதல் 25% வரை கல்லீரல் பாதிப்பு, சிரோசிஸ், கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மேலும் சிலர் ஹெபடைட்டிஸ் பி யின் விளைவாக இறக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், விந்து அல்லது பிற உடல் திரவங்களிலிருந்து ஹெபடைட்டிஸ் பி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது.