இஸ்ரேல் மீது காசா நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் கொல்லப்பட்டார்
தலைநகர் டெ அவிவ், பிற நகரங்களில் விழுந்த ஏவுகணை விழுந்ததில் வாகனங்கள், கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் பலியாகினர். அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காசாவில் உள்ள 13 மாடி கட்டடத்தை இஸ்ரேல் படை தரைமட்டமாக்கியது. முன்னதாக, அதில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 136 ராக்கெட்டுகளை ஏவியது.
தலைநகர் டெ அவிவ், பிற நகரங்களில் விழுந்த ஏவுகணை விழுந்ததில் வாகனங்கள், கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் பலியாகினர். அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
தாக்குதலில் உயிரிழந்த இந்தியப் பெண் கேரளாவைச் சேர்ந்த சவுமியா சந்தோஷ் எனத் தெரியவந்தது. 32 வயதுடைய இவர், இஸ்ரேலின் அஷ்கிலான் நகரில் நர்ஸாக பணியாற்றி வந்தார். தனது வீட்டில் இவர் இருந்தபோது, ஏவுகணை வீட்டின் மீது விழுந்து வெடித்தது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.