Sunita Williams: கடைசி நேரத்தில் வந்த சிக்கல் - சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளி பயணம் திடீரென ரத்து..!
Sunita Williams: சுனிதா வில்லிம்ஸின் விண்வெளிப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sunita Williams: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளரான சுனிதா வில்லியம்ஸின், மூன்றாவது விண்வெளிப்பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விண்வெளிப் பயணம் தொடங்கவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது இந்த திட்டத்தின்படி, விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பிரச்னை என்ன?
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் அடங்கிய குழு, புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்கு புறப்பட இருந்தது. இருப்பினும், திட்டத்திற்கான அட்லஸ் V ராக்கெட்டின் ஆக்சிஜன் வெளியேறும் வால்வில் கோளாறு கண்டறியப்பட்டதால் திட்டம் நிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது.
தாமதமாகும் சாதனைப் பயணம்:
அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதா வில்லியம்ஸிற்கு இது மூன்றாவது விண்வெளி பயணமாக இருந்து இருக்கும். ஏற்கனவே அவர் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து, ஸ்பேஸ் வால்க் செய்து நீண்ட நேரம் ஆய்வு மேற்கொண்ட பெண் என்ற சாதனையை படைத்து இருந்தார். ஆனால், பின்னாட்களில் அந்த சாதனை பெக்கி விஸ்டன் என்பவரால் முறியடிக்கப்பட்டது. இதனிடையே, புதிய விண்கலத்தின் முதல் பயணித்திலேயே இடம்பெறும் முதல் பெண்மணி என்ற சாதனையை அவர் படைக்க இருந்தார். அந்த சாதனை தற்போது தாமதமாகியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணங்கள்:
சுனிதா வில்லியம்ஸ் டிசம்பர் 9, 2006 அன்று தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார், அது ஜூன் 22, 2007 வரை நீடித்தது. விண்கலத்தில் இருந்தபோது, 29 மணி நேரம் 17 நிமிடங்கள் வரை திறந்த விண்வெளியில் பயணங்களைச் செய்து, அதிக நேரம் ஸ்பேஸ் வால்க் செய்த பெண் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். அவரது இரண்டாவது பயணம் ஜூலை 14 முதல் நவம்பர் 18, 2012 வரை இருந்தது.
பயணம் குறித்து சுனிதா சொன்னது என்ன?
மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்வது குறித்து பேசியிருந்த 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், “சற்று பதற்றமாக இருந்தாலும் புதிய விண்கலத்தில் பயணிப்பதில் தனக்கு எந்த நடுக்கமும் இல்லை. நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் போது, அது வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும். நாசா வணிகக் குழு விமானத்தில் விநாயகப் பெருமானின் சிலையை என்னுடன் எடுத்துச் செல்வேன். அவர்தான், என்னுடைய அதிர்ஷ்டமான கடவுள். மதத்தை தாண்டி ஆன்மீக நம்பிக்கை உள்ளது. விண்வெளியில் விநாயகப் பெருமானை தன்னுடன் வைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விண்வெளியில் சமோசா சாப்பிடுவது பிடிக்கும்” என தெரிவித்து இருந்தார்.